வங்க கடலில் நேற்று தோன்றிய காற்றழுத்த தாழ்வு இன்று காற்றழுத்த மண்டலமாக உருவாகியதை அடுத்து இன்று இரவு புயலாக உருவாகிறது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி இருப்பதாகவும் இந்த புயலுக்கு மோக்கோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த புயல் வரும் 11ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த நிலையில் மோக்கோ புயல் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்காசி, நெல்லை, குமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 19 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே11 முதல் 13 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.