அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் குறித்து பேசி வரும் அரசியல் விமர்சகர்கள் “அதிகாரத்தில் இல்லாதபோது ஒரு கட்சியில் என்ன நடக்குமோ, அதுதான் தற்போது அதிமுகவில் நடந்துகொண்டிருக்கிறது. இது புதிதல்ல” என்று கூறுகின்றனர்.
அதிமுகவின் வரலாற்றை ஆராய்ந்தால், 1972-ல் தொடங்கப்பட்ட அந்த கட்சி, ஐந்தே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு, கடந்த 48 ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இல்லாமல் இருந்ததில்லை. இது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தனிப்பட்ட கவர்ச்சியால் சாத்தியமானது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சி அதிகாரமில்லாமல் தடுமாறுகிறது.
அதிமுகவின் ஒரே கொள்கை, திமுக எதிர்ப்புதான். இந்த அரசியல் கோட்பாடுதான், அதன் வெற்றிக்கான அடித்தளமாக இருந்துள்ளது. இப்போது, அதிகாரமில்லாத நிலையில், அடிப்படை கொள்கைகளை இழந்த கட்சி, தனது உட்கட்சிப் பூசல்களால் திணறிக்கொண்டிருக்கிறது. இது கட்சிக்கு மட்டுமன்றி, தமிழக அரசியல் களத்திற்கும் நல்லதல்ல.
அதே நேரத்தில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள், அரசியல் மோதல்களை பற்றி மட்டுமே தமிழக ஊடகங்கள் தொடர்ந்து விவாதிப்பது ஒருதலைபட்சமானது. உலகமே அழிந்து விழுந்தாலும், அதிமுகவை பற்றித்தான் தமிழ்நாட்டு ஊடகங்கள் பேசும். 365 நாட்களும் இதே விவாதத்தை நடத்துகிறார்கள். இது கேவலமான ஊடகவியல்” என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக மக்கள், பல முக்கியமான பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும்போது, அவற்றை பற்றி பேசாமல், கட்சி விவகாரங்களை மட்டுமே பேசுவது, மக்களுக்கு செய்யும் துரோகம். போதை பொருட்கள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, அரசு நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் போன்ற மக்களின் வாழ்வை பாதிக்கும் பிரச்னைகளை ஊடகங்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.
“ஒரு பிரபலமான ஊடகத்தின் உரிமையாளரை, மோடி அரசு கேள்வி கேட்டதாக பெருமையுடன் கூறும் ஊடகவியலாளர்கள், தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஊழல்களை குறித்துக் கேள்வி கேட்கும் தைரியம் எந்த ஊடகத்திற்கும் இல்லை. இது தமிழக ஊடகங்கள் எவ்வளவு இழிவான நிலைக்கு சென்றுள்ளன என்பதை காட்டுகிறது” என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி உள்பட சில நேர்மையான அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். திமுகவின் கட்டுப்பாட்டில் 90% செய்தி ஊடகங்கள் இருப்பதால், இதுபோன்று நடப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக உட்கட்சி பூசல்களை மட்டுமே பேசிவந்த ஊடகங்கள், இப்போது தங்கள் இலக்கை மாற்ற தொடங்கியுள்ளன. நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கிய பிறகு, ஊடகங்களின் கவனக்குவிப்பு அவர் பக்கம் திரும்பியுள்ளது. வார இறுதி நாட்கள் மட்டுமன்றி, வார நாட்களிலும் விஜய்யின் அரசியல் நகர்வுகள், கட்சியின் கொள்கைகள், அவரது பிரசாரப் பயணம் என பல விஷயங்கள் விவாத பொருளாகி வருகின்றன. இது ஒருபுறம் புதிய அரசியல் சக்தி உருவாவதை காட்டுவதாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம், இதுவும் ஆளும் கட்சிக்கான ஆதரவு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்தி என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில அரசின் குறைபாடுகள், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப்பொருள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, லாக்-அப் டெத் போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்கள் நடப்பதில்லை.
கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடுகள் நடந்ததாக அரசு தரப்பிலேயே ஒப்புக்கொண்டாலும், அந்த விவகாரம் ஊடகங்களால் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி, பல முக்கிய வழக்குகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் தேசிய ஊடகங்களால் விவாதிக்கப்படும்போதுகூட, தமிழக ஊடகங்கள் அவற்றை புறக்கணிக்கின்றன.
இந்த நிலை, ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் செயல்பட தடையை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும்போது, மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.
ஒரு காலத்தில், பொதிகை தொலைக்காட்சி மட்டுமே இருந்தபோது, மக்களுக்கு கிடைக்கும் தகவல்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன. ஆனால், அப்போதுகூட, அரசாங்கத்தின் திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவை மக்களுக்கு சென்று சேர்ந்தன. ஆனால் இன்று, பல செய்தி சேனல்கள் இருந்தும், மக்களின் உண்மையான பிரச்சினைகள் விவாத பொருளாகாமல், சில கட்சிகளின் உள்விவகாரங்கள் மட்டுமே பேசப்படுகின்றன.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கூட ஊடகங்கள் அக்கட்சிக்கு தான் சாதகமாக செயல்பட்டு வந்தன. சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தை பெரிய அளவில் விவாதம் செய்த ஊடகங்கள், திமுக ஆட்சியில் நடந்த கவின் உள்பட 25 லாக் அப் டெத் குறித்து ஒரு விவாதமும் நடைபெறவில்லை. ஆனால் மக்கள் இப்போது ஊடகங்களின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர். இன்னும் சில ஆண்டுகள் இதே ரீதியில் ஊடகங்கள் நடந்து கொண்டு மக்கள் ஊடகங்களை புறக்கணிக்கவும் தயங்க மாட்டார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
