சென்னை: கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சி.வி.சண்முகம் தரப்பு வைத்த அந்த ஒற்றை வாதம் தீர்ப்பையே அடியோடு மாற்றி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாகபுகார் எழுந்தது.. இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரித்தார் . அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும் என்றும் ஆனால்
திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்
இதில் கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக்கூறினார். எனினும் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும், வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்வதாக கூறினார்.
இந்த வழக்கின் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.