ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

rss

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் விஜய தசமியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 58 இடங்களில் 52 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாங்காடு, கொரட்டூர், கோவை ரத்தினபுரி ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ்சின் பொதுக்கூட்டம் நடத்த பள்ளிகள் அனுமதியளிக்கவில்லை எனவும், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மேடவாக்கத்திலும், போக்குவரத்து சாலையில் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டதால் சேலையூரிலும், குலசேகரப்பட்டினம் தசரா பண்டிகை காரணம தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ஆகிய இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து நிபந்தனையுடன் கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம், விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவேண்டும். எதிர்காலத்தில், அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

மாங்காடு, ரத்தினபுரி, கொரட்டூர் பகுதிகளில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்கிக் கொடுத்தால், அங்கு அணிவகுப்பு ஊர்வலத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி வழங்கவேண்டும் என காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சாயர்புரத்தில் வரும் 20ம் தேதி அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதால், அன்று அனுமதி வழங்கவேண்டும் என்றும், சேலையூருக்கு பதில் சிட்லபாக்கத்தில் அனுமதி கேட்டால், காவல் துறையினர் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் மே்டவாக்கத்தில் மாற்று வழியில் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், குறிப்பி்ட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர் கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.