அரசியல் களம் என்பது சினிமா திரையை விடவும் மிகவும் சிக்கலானது. சினிமாவில் “சிங்கம் சிங்கிளா தான் வரும்” என்ற வசனம் கைதட்டல்களை பெறலாம், ஆனால் எதார்த்த அரசியலில் தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது இமயமலையை தனியாளாக கடப்பதற்குச் சமம்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி பலமே வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இன்றைய சூழலில், விஜய்யின் இந்த தனித்துவமான முடிவு ஒரு துணிச்சலான சோதனையாகவே பார்க்கப்படுகிறது.
விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால், அவரை தனிமைப்படுத்தித் தாக்க அதிமுக ஏற்கனவே தயாராகிவிட்டது. அதிமுகவின் வாக்கு வங்கியில் விஜய் கைவைப்பார் என்ற அச்சம் இருப்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, விஜய்யின் அரசியல் முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்கும். “இரட்டை இலை” என்ற பாரம்பரிய பலம் தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதையும், விஜய் வெறும் வாக்குப்பிரிப்பாளர் மட்டுமே என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அதிமுக தனது முழு பிரச்சார பீரங்கிகளையும் பயன்படுத்தும். அதே வேளையில், திமுக ஏற்கனவே தனது திராவிட மாடல் மற்றும் வலுவான கூட்டணி பலத்தால் விஜய்யை ஒரு அரசியல் கத்துக்குட்டியாக சித்தரிக்க தொடங்கிவிட்டது.
மறுபுறம், பாஜகவின் அரசியல் ஆட்டம் முற்றிலும் வேறாக இருக்கும். விஜய்யின் அரசியல் வருகை தேசிய நீரோட்டத்திற்கு எதிரானதா அல்லது சாதகமானதா என்பதை பொறுத்து அவர்களின் வியூகங்கள் மாறும். இருப்பினும், இந்துத்துவ அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை விஜய் எடுத்தால், பாஜகவின் விமர்சன கணைகள் அவர் மீது பாயும். அண்ணாமலை போன்ற தலைவர்கள் விஜய்யின் கொள்கை தெளிவின்மையை தொடர்ந்து சாடக்கூடும். மேலும், செல்வபெருந்தகை, வைகோ மற்றும் திருமாவளவன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள், விஜய்யின் திராவிடம் + தமிழ் தேசியம் என்ற கலப்பு சித்தாந்தத்தை தர்க்க ரீதியாக எதிர்கொண்டு, அவரை ஒரு பி-டீம் என்று முத்திரை குத்தத் தயங்க மாட்டார்கள்.
விஜய்க்கு ஒரு பக்கம் திராவிட கட்சிகளின் எதிர்ப்பு என்றால், இன்னொரு பக்கம் சீமானின் “நாம் தமிழர் கட்சி” பெரும் சவாலாக இருக்கும். ஒரிஜினல் தமிழ் தேசியம் தங்களுடையது என்று கூறும் சீமான், விஜய்யின் வருகையை தனது வாக்கு வங்கிக்கான அச்சுறுத்தலாகவே கருதுவார். சினிமா கவர்ச்சி அரசியலுக்கு பொருந்தாது என்று ஏற்கனவே சீமான் பேச தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் விஜய்யின் ஒவ்வொரு அடியையும் அவர் கடுமையாக விமர்சிப்பார். விஜய்யிடம் இருக்கும் அதே இளைஞர் மற்றும் முதன்முறை வாக்காளர்களை சீமானும் குறிவைப்பதால், இருவருக்கும் இடையிலான மோதல் மிக கடுமையாக இருக்கும்.
இத்தனை எதிர்ப்புகளையும் தனி மனிதராக விஜய் எப்படி சமாளிப்பார் என்பதுதான் தற்போதைய கேள்வி. அரசியலில் அடிப்படை கட்டமைப்பு என்பது மிக முக்கியம். திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஊர் தோறும் கிளை கழகங்கள் உள்ளன. ஆனால் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மட்டுமே நம்பி இக்களத்தில் இறங்கியுள்ளார். சித்தாந்த ரீதியான தெளிவு, நிர்வாகத் திறன் மற்றும் மற்ற தலைவர்களின் தனிப்பட்ட விமர்சனங்களை தாங்கும் மனப்பக்குவம் ஆகியவை அவருக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும். தேர்தல் களத்தில் தனித்து நிற்பது என்பது, மற்ற எல்லா கட்சிகளின் தாக்குதல்களுக்கும் ஒரே இலக்காக மாறுவதை குறிக்கும்.
எந்த பக்கமும் சாயாமல் “சிங்கிளாக” வரும் விஜய், இந்த அரசியல் சூறாவளியை சமாளிக்க வேண்டுமானால், மக்களிடம் ஒரு வலுவான மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். வெறும் சினிமா பிம்பம் மட்டும் போதாது; மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவர் எப்படி சொல்லப்போகிறார் என்பதில் தான் அவரது அரசியல் எதிர்காலம் உள்ளது. மற்ற கட்சிகள் அவரை ஜெராக்ஸ் காப்பி என்று விமர்சிக்கும் வேளையில், தான் ஒரு ஒரிஜினல் என்று நிரூபிக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு உண்டு. இந்த நெருப்பில்தான் விஜய்யின் அரசியல் ஆளுமை பட்டை தீட்டப்பட போகிறது.
Solo vs All: Vijay’s Political Survival in the 2026 Tamil Nadu Election Storm
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
