சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4-வது வழித்தடம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைந்த உடன் வேளச்சேரிக்கு வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து சேவை அளிக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. தற்போது தாம்பரம் முனையம் தயாராகி வருகிறது. அங்கிருந்து வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும், மின்சார ரயில்களை தடையில்லாமல் இயக்குவதற்கு சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.279.8 கோடியில் 4-வது புதிய பாதை பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்காக ஆகஸ்டு 27-ந்தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை வரை சேவை நிறுத்தப்பட்டது. இதனால் வேளச்சேரி செல்லும் அனைத்து ரயில்களும் சிந்தாதிரிபேட்டையில் இருந்து புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நிலத்தில், 250 சதுர மீட்டர் நிலம் ரிசர்வ் வங்கிக்கும், 2 ஆயிரத்து 875 சதுர மீட்டர் பரப்பளவிலான இடம் கூவம் ஆறு (கூவம் ஆற்றின் கரையோர பகுதி) பகுதி மாநில அரசுக்கும் சொந்தமானது ஆகும். மாநில அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரயில்வே அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி நிலம் கையகப்படுத்தி உள்ளார்கள்.
இதேபோல், 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான இடம் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் வருவதால், அத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி பெரிய போராட்டத்திற்கு இடையில் இடம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இடம் பெறுவதில் சற்று காலதாமதம் ஆனதால் திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறுகையில் ‘சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நடந்து வரும் 4-வது வழிப்பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து வழக்கம் போல் கடற்கரையில் இருந்து வேளாச்சேரி உள்பட அனைத்து ரயில்களும் இயக்கப்படும்.
பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னையின் 4-வது ரயில் முனையமாக மாற்றும் நடவடிக்கைக்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.