இந்தியாவின் லிஃப்ட் உற்பத்தி மையமாகத் தமிழகம்: தொழில் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியில் புதிய உச்சம்!
இந்தியாவின் லிஃப்ட் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு, இந்த துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு விநியோக சங்கிலி ஆகியவற்றை மையப்படுத்தி, உலகளாவிய சந்தையில் ஒரு புதிய இடத்தை பிடிக்க தமிழ்நாடு அரசு மற்றும் முன்னணி நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவின் லிஃப்ட் மையமாகத் தமிழகம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்று லிஃப்ட்களில் ஒன்று தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் தேவை சுமார் 85,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதில், 30% தேவையை தமிழ்நாடு பூர்த்தி செய்கிறது. லிஃப்ட் உற்பத்திக்கு தேவையான 80% உதிரி பாகங்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்குவதாகவும், இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிப்பதாகவும் ஜான்சன் லிஃப்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் யோஹான் கே. ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் லிஃப்ட் சந்தை ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. ஜான்சன், கோன் (KONE), புஜிடெக் (Fujitec) போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களும், உள்ளூர் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் வலுவான உற்பத்தி தளங்களையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளையும் நிறுவியுள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் லிஃப்ட்கள் உள்நாட்டு தேவைக்கு மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஜான்சன் லிஃப்ட்ஸ் நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளாக லிஃப்ட் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, அதன் ஆண்டு உற்பத்தித் திறன் 10,000க்கும் அதிகமாகும். புதிய உற்பத்தியை மேம்படுத்த, இந்நிறுவனம் சங்கர்புரத்திலுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ரூ.600 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தியுள்ளது.
கோன் எலிவேட்டர்ஸ், பின்லாந்தை சேர்ந்த உலகளாவிய நிறுவனமாகும். இதன் துணை நிறுவனமான கோன் இந்தியா, சென்னையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளது. சுமார் 72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில், புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வரவும், அவற்றை சோதிக்கவும் வசதிகள் உள்ளன.
உள்ளூர் விநியோகச் சங்கிலி மற்றும் அரசு ஆதரவு
ஒரு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எஃகு பாகங்களை சார்ந்து இருந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எஃகு பாகங்களை பயன்படுத்தி, லிஃப்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உற்பத்தியை செலவு குறைந்ததாகவும், சர்வதேச அளவில் போட்டித்தன்மை கொண்டதாகவும் மாற்றியுள்ளது. இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் (Bureau of Indian Standards) வழிகாட்டுதல்கள் லிஃப்ட்களின் தரத்தை உறுதி செய்கின்றன.
தமிழ்நாடு அரசு இந்தத் துறைக்கு தேவையான ஆதரவை அளிக்கிறது. உள்ளூர் உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை வகுத்து, உள்நாட்டு விநியோக சங்கிலியை வலுப்படுத்த அரசு கவனம் செலுத்துகிறது. இது, இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகமாக்க உதவும்.
தமிழ்நாட்டின் லிப்ட் துறை வளர்ச்சி, உலகளாவிய லிஃப்ட் சந்தையில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய இடத்தை பெற்று தருவதோடு, மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இது, தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக அமைகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
