நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்து, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை அளித்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த செயல்கள், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கான கதவுகளைத் திறக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய வேட்டையை தொடங்க மத்திய அரசு திட்டமிடுகிறதா என்ற ஊகங்களையும் கிளப்பியுள்ளது.
கரூரில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட போதிலும், மத்திய அரசும் இந்த விவகாரத்தை மிக தீவிரமாக கையாண்டது.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனடியாக கரூர் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
நிர்மலா சீதாராமனின் அறிக்கையில் மாநில அரசின் நிர்வாக தவறுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் துயரம் ஆகியவை குறித்த விவரங்கள் உள்ளடக்கி இருக்கலாம் என்றும், விபத்து நடந்த விதமும், பாதிக்கப்பட்டவர்களின் வறுமை நிலையையும் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை திரட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு அறிக்கைகளும் மத்திய அரசின் உயர்மட்டத்தில் உள்ளதால், இது வெறும் சட்டம்-ஒழுங்கு விவகாரம் என்ற நிலையை கடந்து, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் என்று கருதப்படுகிறது.
கரூர் விவகாரம் தொடர்பாக த.வெ.க. சிபிஐ விசாரணை கோரியுள்ள நிலையில் மத்திய அரசு, தனது பலத்தை பயன்படுத்தி சிபிஐ விசாரணையை அறிவித்தால், தமிழக அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பெரும் தாக்கம் ஏற்படும்:
சிபிஐ விசாரணையின் பிரதான இலக்கு, இந்த விபத்து நடந்ததற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய மாநில காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடாக இருக்கும். இது ஆளும் தி.மு.க. அரசு மீது நேரடி பழியைச் சுமத்தும். அரசு அனுமதி அளித்த இடம், கூட்டத்தை கட்டுப்படுத்தத் தவறியது, மின் தடை போன்ற அம்சங்களில் விசாரணையின் கவனம் திரும்பினால், தி.மு.க. அரசியல் ரீதியாக நெருக்கடியை சந்திக்கும்.
ஆனால் அதே நேரத்ஹில் த.வெ.க.வின் சில நிர்வாகிகள் மீது ஏற்கனவே மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ விசாரணை நடந்தால், கூட்டத்தை உரிய முறையில் கையாளாதது, போலீஸ் அறிவுறுத்தல்களை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் த.வெ.க. நிர்வாகிகளுக்கு எதிரான விசாரணை மேலும் தீவிரமடையலாம். இது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
மாநிலத்தின் ஒரு விவகாரத்தில் மத்திய விசாரணை அமைப்பின் தலையீடு, மாநில உரிமைகள் மற்றும் மத்திய-மாநில உறவுகளில் மோதலை உருவாக்கலாம். இது ஆளும் தி.மு.க.வால் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு, “மத்திய அரசின் தலையீடு” என்ற பிம்பத்தை வலுப்படுத்தக்கூடும்.
அரசியல் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், விபத்துக்கு காரணமான அனைத்து தரப்பினரின் கவனக்குறைவும், உண்மையான நிர்வாக தவறுகளும் வெளிப்படையாக வெளிவர வாய்ப்பு ஏற்படும். இருப்பினும், சிபிஐ தனது விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்கு பணிவான முறையில் அளிக்கும் என்ற விமர்சனமும் உள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி த.வெ.க. மற்றும் பா.ஜ.க. சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. எனினும், இந்த விபத்து குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது மாநிலக்காவல்துறை மீது நீதிமன்றத்திற்கே முழு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் கரூர் விவகாரம், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் அதிகார போராட்டத்தின் மைய புள்ளியாக உருவெடுத்துள்ளதுடன், விஜய்யை இரு கட்சிகளும் பகடைக்காயாக பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
