தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் உருவாகி வருவதை காரைக்குடி மண்ணில் திரண்ட மக்கள் கூட்டம் உலகிற்கு பறைசாற்றியுள்ளது. வழக்கமாக அரசியல் கூட்டங்கள் என்றாலே லாரிகளில் ஆட்களை ஏற்றி வருவது, பணப்பட்டுவாடா, மதுபானம் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் என ஒரு கணக்கு இருக்கும். ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் காரைக்குடி வருகையின் போது இவை எதுவுமே இல்லாமல், மக்கள் தாமாகவே முன்வந்து அலைகடலென திரண்டது திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய அரசியல் வியூகங்களை நிலைகுலைய செய்துள்ளது. எவ்விதத் தூண்டுதலும் இன்றி, ஒரு தலைவனை பார்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக தார்ச்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் மக்கள் காத்திருந்தது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு அதிசயம்.
இந்த கட்டுக்கடங்காத மக்கள் எழுச்சியை கண்டு பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல் கும்பல்கள் பெரும் அச்சமடைந்துள்ளன. தங்களது அதிகார பலம் மற்றும் பண பலத்தை கொண்டு கூட்டத்தை கூட்டும் இவர்களுக்கு, ஒரு பைசா செலவில்லாமல் திரண்ட இந்த தலைகளின் கடல் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியுள்ளது. “காசு இல்லை, கறிச்சோறு இல்லை, ஆனாலும் இவ்வளவு கூட்டம் எப்படி?” என்ற கேள்வியே இப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் ரகசிய விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் சினிமா கவர்ச்சியால் ஆனது அல்ல, அது திராவிட அரசியலின் மீதான மக்களின் ஆழ்ந்த அதிருப்தியின் வெளிப்பாடு என்பதை இந்த பிரம்மாண்டம் உறுதிப்படுத்துகிறது.
விஜய்யின் வருகையை தங்களது கேமராக்களில் பதிவு செய்ய காத்திருந்த தேசிய ஊடகங்களுக்கு, காரைக்குடி பொதுமக்கள் வலிய வந்து பேட்டி கொடுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்திய விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் மாற்றத்தை விரும்புகிறோம், விஜய்யிடம் ஒரு நேர்மையைக் காண்கிறோம்” என பொதுமக்கள் வெளிப்படையாக பேசுவது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே பழகிப்போன வட இந்திய ஊடகங்கள், இப்போது விஜய்யின் மக்கள் செல்வாக்கை ஒரு “மக்கள் புரட்சி” என வர்ணிக்க தொடங்கியுள்ளன. காரைக்குடியில் தொடங்கிய இந்த எழுச்சித் தீ, வரும் 2026 தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சூழ்ந்து கொள்ளப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி திரண்ட இந்த “உண்மையான” மக்கள் கூட்டம், பணநாயகத்தை விட மக்கள் நாயகமே வலிமையானது என்பதை நிரூபித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
