கரூர் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் கருத்து தெரிவிக்கையில், கரூர் சம்பவத்தில் ‘சதி’ இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றஞ்சாட்டுகின்றனர். இது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டால், ஆளும் தி.மு.க. அரசுக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும், அவர் ஆளும் தரப்பின் நடவடிக்கைகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்:
கள்ளக்குறிச்சி அல்லது மற்ற சம்பவங்களில் இல்லாத அவசரம் கரூர் விவகாரத்தில் ஏன் வந்தது? இரவு வேளையிலேயே 30-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்து, அவற்றை எரித்தது ஏன்?
ஒரு மாநிலத்தில் அசம்பாவிதம் நடந்தால், முதன்மை பொறுப்பு மாநில அரசுக்கே உள்ளது. விஜய் தரப்பில் தவறு இருக்கலாம்; ஆனால், மாநில அரசே தனது காவல் துறை மற்றும் உளவுத்துறை தகவல்களை பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, நிகழ்ச்சியை தடுக்கவோ தவறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, எதிர்த்தரப்பான விஜய் தரப்பின் வாதத்தை கேட்காமல், அரசுத் தரப்பின் விளக்கத்தை மட்டும் பெற்று, விசாரணைக் குழு அமைத்தது சரியல்ல. நீதி என்பது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே வழங்கப்பட வேண்டும்.
ஆளும் கட்சித் தரப்பு ஊடகங்களில் மணிக்கணக்கில் விளக்கம் அளித்து, அரசு மீது தவறு இல்லை என்று பிரச்சாரம் செய்தது. ஆனால், மறுப்பு கருத்தை தெரிவித்தவர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது.
உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்து, விசாரணையை நேரடியாக கண்காணிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏகலைவன் இது குறித்து மேலும் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரிக்கும்போது அரசியல் தலையீடுகளுக்கு இடம் இருக்காது. நீதிமன்றம் வெளியிலிருந்து செய்தித்தாள்கள், அரசியல் தலைவர்கள் பேட்டிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கியே இந்த முடிவை எடுத்திருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
காவல்துறையை செயலிழக்கச் செய்தது, அவசர செயல்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பெறாமல் பிரேத பரிசோதனை செய்தது போன்ற பல முரண்பாடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்போது, அதில் ஏதேனும் ‘சதி’ அல்லது உள்நோக்கம் உள்ளதா என்பது விசாரணையில் தெரியவரும். மேலும், ஒரு முன்னாள் அமைச்சரின் பெயரும் பின்னணியில் அடிபடுவதால், இந்த விசாரணை தி.மு.க.வுக்கு ஆறு மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஏகலைவன் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
