தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரியில் வெளியாக இருக்கின்ற நிலையில், அதன் பிறகு அவர் 24 மணி நேரமும் அரசியல் பணியில் முழுமையாக ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ரிலீஸான பின்னர், அந்த மாதம் முழுவதும் படத்தை ரசிகர்கள் கொண்டாட அவர் அவகாசம் அளிக்கிறார். அதன் பிறகு பிப்ரவரி மாதம் முதல், அவர் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்குவார் என்றும், அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடம் மட்டுமே கூட்டணிக்கு பேச்சு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டவில்லை என்றால், அது குறித்து கவலைப்படாமல் மார்ச் முதல் அவர் தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போதே விஜய்யின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் கட்சி ஆரம்பித்து வீட்டில் இருந்தே பணி செய்கிறார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார்” என்று கூறுபவர்களை வாயடைக்கும் வகையில், முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, முக்கிய நகரங்களுக்கு செல்லாமல், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களுடன் நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த பக்கா பிளான் வெற்றியடையுமா? அவருக்கு தேர்தலில் சாதனை வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!