சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்.13 மற்றும் 14ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 13ம் தேதியும், 14ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது. இப்போது மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வு காரணமாக, அடுத்து வரும் ஒரு வார காலத்துக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (அக்.12) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்.13 மற்றும் 14ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 13ம் தேதியும், 14ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அரபிக்கடலில் இருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை ஒரு வார காலத்துக்கு மழை பெய்யும். வரும் அக்டோபர்14ம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,” இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.