சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ ஒரு பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படுவதுடன், த.வெ.கவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றோர் கூட விரைவில் கைது செய்யப்படலாம் என்ற நிலை நிலவுகிறது. இந்த விவகாரம் சூடுபிடித்தால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுவது போல, விஜய் கூட கைது செய்யப்படலாம் என்ற அச்சம் அவரது ஆதரவாளர்களிடையே பரவலாக உள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், தனது அரசியல் இருப்பையும், தன் கட்சி தொண்டர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த, விஜய்க்கு ஒரு வலுவான தேசிய கட்சியின் ஆதரவு இன்றியமையாததாகிறது. இதுவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளின் பார்வை விஜய்யை நோக்கி திரும்பியுள்ளதன் அடிப்படை பின்னணியாகும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏற்கனவே கரூர் விவகாரத்தை கையில் எடுத்திருப்பது, திமுகவுக்கு எதிரான ஒரு மாபெரும் அரசியல் அஸ்திரமாக மாறியுள்ளது. கரூர் சம்பவத்தை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, சதி ஆகிய குற்றச்சாட்டுகளை வலுவாக முன்வைத்து, திமுகவின் நிர்வாக திறமையை நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவும், மத்திய அரசின் நிறுவனங்களை கொண்டு அழுத்தங்களை கொடுக்கவும் அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஏற்கெனவே, தமிழகத்தில் ஒரு வலிமையான கூட்டாளியை தேடிக்கொண்டிருக்கும் பாஜக, விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பல மாதங்களாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அமித்ஷா சரியாக இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நெருக்கடி நிறைந்த தருணத்தில், விஜய்க்கு மத்திய அரசின் அமைப்புகள் மூலம் பாதுகாப்பு அளிப்பதன் வாயிலாக, விஜய்யை எளிதாக தங்கள் பக்கம் ஈர்த்துவிட முடியும் என்று பாஜக நம்புகிறது. கரூர் விவகாரத்தை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடும் வல்லமை அமித்ஷாவுக்கு உண்டு என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே, விஜய் எந்தவிதமான அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை கவனித்து, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அவரை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வது என்ற வியூகத்தை பாஜக வலுவாக கையாண்டு வருகிறது.
பாஜக தனது வியூகத்தை வகுத்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக செயல்பட வேண்டிய நேரம் இது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி உடனடியாக விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். “விஜய் மற்றும் அவரது நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சியான திமுக பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்ட வேண்டும். கரூர் விவகாரத்தை ஒரு காரணமாக காட்டி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ராகுல் காந்தி தைரியமாக அறிவிக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராகுல் காந்தி வெளியிட்டால், அது விஜய்க்கு மிகப் பெரிய அரசியல் ஸ்திரத்தன்மையையும், மன ஆறுதலையும் தரும்.
ராகுல் காந்தி இவ்வாறு வெளிப்படையாக ஆதரவு அளித்து, கூட்டணியை உறுதி செய்தால், கரூர் சம்பவம் உட்பட தற்போதுள்ள அனைத்து சட்டச் சிக்கல்களிலிருந்தும் விஜய் ஒரு பெரிய ஆறுதல் பெருமூச்சு விட வாய்ப்பு உண்டு.
ராகுல் காந்தி இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த தவறினால், பாஜக எளிதாக விஜய்யை கொத்திக்கொண்டு போய்விடும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். தேசிய அளவில் நலிந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் விஜய்யின் இளைஞர் கூட்டத்தின் ஆதரவு ஒரு பெரிய புத்துணர்ச்சி அளிக்கும். இந்த வாய்ப்பை தவறவிட்டால், தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஒரு வலுவான இடத்தை பிடிப்பது மிக கடினமானதாகிவிடும்.
விஜய்க்கு தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்குமா அல்லது அவர் தனித்து விடப்படுவாரா என்பதை பொறுத்துத் தமிழக அரசியல் களம் மாறும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
