சென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்

சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் ஒன்றை அமைக்கப்பட…

International Center at Muttukadu in the name of Karunanidhi at a cost of Rs.525 crores

சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் ஒன்றை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்டப்பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்

சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ‘நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதியின் பெயரில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு மையத்தை சென்னையில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. உலகளவில் உள்ள சிறந்த மாநாட்டு மையங்களில் ஒன்றாக இது அமைய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த கலைஞர் மாநாட்டு மையம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்டமாக உலகத்தரத்தில் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

அதில், உலகளாவிய தொழில் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும். சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் எனக்கு உதயமானது. மிக பிரமாண்டமான முறையில் ‘கலைஞர் மாநாட்டு மையம்’ (கலைஞர் கன்வென்சன் சென்டர்) அமையவுள்ளது’ என்று கூறினார. இதனை தொடர்ந்து தற்போது இந்த மாநாட்டு மையத்தை அமைக்க பொதுப்பணித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரி இருக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை- மாமல்லபுரம் செல்லும் சாலையில் முட்டுக்காடு அருகில் 32 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்தில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் ‘மாநாட்டு மையம்’ ஒன்று கட்டப்பட உள்ளது. குறிப்பாக கண்காட்சி அரங்கம் ரூ.184.50 கோடியிலும், சர்வதேச மாநாட்டு மையம் ரூ.109.30 கோடியிலும், விருந்து அரங்குகளுடன் கூடிய அரங்கம் ரூ.115.20 கோடியிலும், வெளிப்புறத்தில் பாதுகாப்பு, சாலை வசதி, அலங்கார வளைவு, மின்சார வசதிகள் உள்ளிட்ட பணிகள் ரூ.116 கோடி உள்பட ரூ.525 கோடியில் பணிகள் நடக்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பன்னோக்கு மாநாட்டு கூடம் அமைக்கப்படுகிறது.

இதுதவிர 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம், திறந்தவெளி காட்சியகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடங்கள், 1,800 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. இதில் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகள், வணிக நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் அமைக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்பட்டு திட்டமிட்ட காலத்தில் கட்டி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.