நமது இந்திய ராணுவம் உலக அளவில் மிகப் பலம் பொருந்திய ராணுவப் படையாகத் திகழ்கிறது. தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மற்றும் இதர கம்பெனி ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் என பல படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. உலக இராணுவ அரங்கில் தளவாடங்களிலும், ஆயுதங்களிலும், வீரர்களிலும் இந்தியா மிகப்பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தினைக் கொண்டுள்ளது.
இராணுவத்தின் செயல்பாடுகளையும், இராணுவத் தளவாடங்கள் மற்றும் கப்பல், விமானப் படையின் சாகசங்களையும், சாதனைகளையும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின அணிவகுப்பு விழாக்களில் காண்பது வழக்கம். மேலும் அவ்வப்போது இராணுவக் கண்காட்சியும் நடைபெறும். இதில் புதிய ஆயுதங்கள், பீரங்கிகள் செயல்பாடு, எதிரிகளை அழிக்கும் நவீன உபகரணங்கள் என அனைத்தும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
அந்த வகையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டை கொண்டாடும் வகையில் வான் சாகச நிகழ்வானது வருகிற அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த வான் சாகசத்தில் ரபேல் விமானங்கள், சூரிக் விமானங்கள், நவீன ஹெலிஹாப்டர்கள் போன்றவை பங்கு பெற்று சாகசங்களை நிகழ்த்த உள்ளது.
சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
இதுவரை தலைநகர் புதுடெல்லியில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்த சாகசங்கள் கடந்த 2022 முதல் இதர மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. கடந்த முறை சண்டிகரில் நடைபெற்றது. தற்போது சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 4-ம் தேதி இதற்கான ஒத்திகையும் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மதியம் 1 மணி வரை இந்த சாகச நிகழ்வானது நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது. இந்தத் தகவலை இந்திய விமானப் படையின் துணைதளபதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார். என்ன சென்னை மக்களே விமான சாகசங்களைக் கண்டுகளிக்கத் தயாரா?