சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு

By Keerthana

Published:

சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘சென்னை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களாக்கள் முன்பு ‘வாகனத்தை நிறுத்தாதீர்கள்’ (நோ பார்க்கிங்) என்ற அறிவிப்பு பலகை, வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் விதமாக மண் மூட்டைகள், இரும்பு தடுப்புகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக வைக்கின்றனர். பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய சாலையை அவர்கள் ஆக்கிரமிக்கின்றனர்.

இதுபோன்ற செயல்கள் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம், அசோக் நகர் பகுதிகளில் அதிகம் நடைபெறுகின்றன. இதை தடுக்கும் விதமாக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ் வாதிடுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ உள்ளிட்டவைகளை அகற்றி விட்டோம் என்றார். அதுகுறித்து புகைப்படத்தையும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து மனுதாரர் தரப்பு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘‘சென்னை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பங்களாக்கள், வீடுகள் முன்பு சட்டவிரோதமாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகை, மண் மூட்டைகள், இரும்பு தடுப்புகள் வைப்போர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் இந்த விவகாரம் குறித்து தகுந்த விதிமுறைகளை உருவாக்கி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த விதிமுறையில் இதுபோன்ற சட்டவிரோதமாக ‘நோ பார்க்கிங்’ பலகை உள்ளிட்ட தடுப்புகளை வைப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பத்திரிகைகள், டி.வி. சேனல்களில் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை 2 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.