சென்னை: எல்ஐசி தொடர்பாக சில நேரங்களில் தவறான செய்திகள் அடிக்கடி பரவி வருகின்றன. அந்த வகையில் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் உண்மை இல்லை என எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது.
பாலிசி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “எல்.ஐ.சி. பாலிசிதாரர்களின் பாலிசிகளை, எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சமீபத்திய செய்திக்கட்டுரைகள் வாயிலாக அறிகிறோம்.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு அத்தகைய நிறுவனங்களுடனோ அல்லது அத்தகைய நிறுவனங்களின் சேவைகளுடனோ எந்தவித தொடர்பு இல்லை. இதுதொடர்பாக, முன்னாள் எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்களின் அறிக்கை, அவர்களுடைய சொந்த கருத்துகள்தான். இதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் எந்தவித பொறுப்புகளையும் ஏற்காது. எல்.ஐ.சி. பாலிசிகள் விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் ஆகியவை காப்பீட்டு சட்டம் (1938)-ன்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, மேற்கண்டவாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை, அவை பாலிசிதாரர் நலன் சார்ந்தது அல்ல, பொது நலனுக்கு உகந்தது அல்ல, பாலிசிகளை வர்த்தகம் செய்யும் நோக்கிலானது ஆகிய காரணங்களுக்காக எல்.ஐ.சி. நிறுவனம் நிராகரிக்கலாம். எனவே, பாலிசிதாரர்கள் இதுதொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, முழு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதுதொடர்பான முடிவுகள், பாலிசியின் ஆயுள் காப்பீட்டு பலன்கள் மற்றும் பாலிசிதாரரின் நிதி பாதுகாப்பை பாதிக்கலாம். எந்த ஒரு முடிவை செயல்படுத்துவதற்கு முன்பு, எங்கள் கிளைகளில் உள்ள எல்.ஐ.சி. அதிகாரிகளுடன் தயவு செய்து கலந்தாலோசிக்க வேண்டும். எல்.ஜ.சி. நிறுவனம் வெளிப்படைத்தன்மை மற்றும் பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது” இவ்வாறு அந்த அறிவிப்பில் எல்ஐசி நிறுவனம் கூறியுள்ளது.