குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்

By Keerthana

Published:

சென்னை: குரூப்-4 பணிகளுக்கான காலியிடங்கள் 2-வது முறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த மாதமும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

குரூப்-4 பணிகளில் வரும் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம இறுதியில் வெளியிட்டது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதியிருந்தார்கள். அதிகம் பேர் தேர்வை எழுதியுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைய சற்று காலம் எடுக்கும் என்றும் எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ? அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் போட்டியிடும் நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 இடங்களை அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி. உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 2 ஆயிரத்து 208 இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. இப்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப்-4 பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. தேர்வு எழுதியவர்களுடன் இந்த காலி இடங்களை ஒப்பிடும்போது, ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டியில் உள்ளனர்.