நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது முதல் பிரசாரப் பயணமான திருச்சி பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே, குறிப்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.விடம், ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் பேச்சும், அவருக்கு கிடைத்த வரவேற்பும் தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளன.
திருச்சியில் விஜய் பேசிய அதே நேரத்தில், தி.மு.க.வின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், “கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் தி.மு.க. அல்ல. நாம் கூடும்போது கொள்கை பட்டாளமாக கூடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது விஜய்யை தான் மறைமுகமாக குறிப்பிட்டது போல் தோன்றியது.
விஜய்யின் பிரசார ஊர்வலம் நடந்துகொண்டிருந்தபோது, இந்த அறிக்கை வெளியானது. இது தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஊடகங்கள் மூலம் உடனடியாக பரப்பப்பட்டது. அதேபோல் விஜய் பேசிய பல முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு, “தம்பி, கீழ இறங்குப்பா” என்று அவர் கூறிய ஒரு சில வினாடி பேச்சை மட்டும் சில ஊடகங்கள் பெரிதுபடுத்தி, விஜய் தொண்டர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சித்தன. ஆனாலும், ஊடகங்களின் இந்த எதிர்மறை பிரசாரம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
விஜய் தனது மாநாடுகளில் பேசிய கருத்துக்கள், மக்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை தூண்டியுள்ளன. “நான் இங்கு பணம் சம்பாதிக்க வரவில்லை; பணத்தை நான் பார்த்துவிட்டேன்,” என்று விஜய் கூறியது, இன்றைய அரசியல் களத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான முழக்கமாக பார்க்கப்படுகிறது.
மேலும், அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், ஒற்றை தேர்தல், குடும்ப அரசியல், மற்றும் ஊழல் போன்ற விஷயங்களை அவர் நேரடியாகவும், துணிச்சலாகவும் பேசியது, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதாக கருதப்படுகிறது.
விஜய்யின் கூட்டத்தில் செருப்புகள் சிதறிக் கிடந்தன, பாரிகேடுகள் உடைக்கப்பட்டன போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது இது இயல்பானது என்றும், விஜய்யின் பேச்சை கேட்க மக்கள் எந்த தடைகளையும் தாண்டி வந்தனர் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஒருபுறம், ஒரு அரசு விழா, மறுபுறம் விஜய்யின் பொதுக்கூட்டம் என இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடந்தன. இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா மற்றும் பிரபல நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முதலில் பெரும்பாலான ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை தான் நேரலையாக ஒளிபரப்பின. ஆனால், பெரும்பாலான தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் விஜய்யின் கூட்டத்திற்கே முக்கியத்துவம் அளித்தன. டி.ஆர்.பி. ரேட்டிங் மற்றும் பார்வையாளர்கள் விஜய்யின் பக்கமே இருந்ததால், ஊடகங்கள் வேறு வழியின்றி இளையராஜா நிகழ்ச்சி ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டு விஜய் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன. இது விஜய்க்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே இருந்தாலும் ஒத்தை ஆளாக விஜய்க்கு தான் வெற்றி என்பது உறுதியாகிறது.
தி.மு.க.வின் பதற்றம், விஜய்யின் வருகை, மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனமாற்றம் ஆகியவற்றை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழக மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், அதன் பிரதிபலிப்பே இந்த கூட்டம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் பேச்சுக்கள், வெறும் மேலோட்டமான விமர்சனங்களாக இல்லாமல், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும், சில அமைச்சர்களின் செயல்பாடுகளை நேரடியாக கேள்வி கேட்பதாக அமைந்திருந்தன. இது அவருக்கு ஒரு மக்கள் தலைவராக புதிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.
விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் நான்கு முனை போட்டிக்கு வித்திட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன், இப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் உள்ளது. இந்த அரசியல் சூழலில், விஜய்யின் மக்கள் ஆதரவு, தி.மு.க.விற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பணம் கொடுத்து கூட்டத்தை வரவழைக்கும் மற்ற கட்சிகளுக்கு மத்தியில், இலவசமாக மக்கள் கூட்டம் திரள்வது, விஜய்க்கு ஒரு பெரிய பலமாக உள்ளது. இது, எதிர்கால தேர்தல்களில், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கக்கூடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
