தமிழ்நாட்டு அரசியல் களம் வழக்கத்திற்கு மாறாக சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவரின் வருகை, த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒரு ‘தங்கச் சுரங்கமாக’ அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கோட்டையனை விஜய் எந்த வியூகத்துடன் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே த.வெ.க.வின் வெற்றி வாய்ப்புகள் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செங்கோட்டையனின் அரசியல் பயணம் என்பது விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வரலாறு. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலிருந்தே கட்சியில் இருக்கும் அவர், பின்னாளில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான அமைச்சராக திகழ்ந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களின்போது, சசிகலா, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி என பல்வேறு தலைமையின் கீழும் விசுவாசமாக செயல்பட்டவர் இவர்.
தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் செங்கோட்டையனின் இந்த குணம், விஜய்க்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். த.வெ.க.வின் இளம் தலைமையின் கீழ், செங்கோட்டையன் தனது அரசியல் வரலாற்றின் அதே விசுவாசத்துடனும், ஆழ்ந்த அனுபவத்துடனும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசுவாசமும் அனுபவமும் த.வெ.க.வின் அரசியல் வியூகத்தை வலுப்படுத்த முக்கியமானதாகும்.
செங்கோட்டையனின் பலம் என்பது அவரது தனிப்பட்ட செல்வாக்கை தாண்டி, கொங்கு மண்டலத்தில் அவருக்கு இருக்கும் ஆழமான வேர்களும், களப்பணி அனுபவமும்தான். கட்சியை பூத் லெவல் வரை கட்டமைப்பது, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது போன்ற முக்கிய பணிகளுக்கு இவரது அனுபவம் மிகவும் தேவை. விஜய்யின் மக்கள் செல்வாக்கு வாக்குகளை ஈர்க்கும்; ஆனால் செங்கோட்டையனின் அனுபவம் அந்த வாக்குகளை சீரான முறையில் வாக்குச் சாவடி வரை கொண்டு சேர்க்கும் திறனை த.வெ.க.வுக்கு அளிக்கும்.
மேலும், கொங்கு மண்டலம் நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ள நிலையில், செங்கோட்டையன் போன்ற ஆளுமை அங்கிருந்து விலகி த.வெ.க.வில் இணைவது, கொங்கு வாக்குகளில் பிளவை ஏற்படுத்தி, அ.தி.மு.க.வின் கோட்டையை உடைக்க வாய்ப்புள்ளது. இந்த அனுபவத்தை விஜய் சரியான முறையில் பயன்படுத்தினால், த.வெ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் நான்கு முனை போட்டியாக அதாவது தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க கூட்டணி, சீமான் கட்சி என மாறும் வாய்ப்புள்ளதால், முதல் தேர்தலிலேயே தவெக ஆட்சியை பிடிப்பது கடினம். ஆனால், இந்த கடுமையான போட்டியில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபையை உருவாக்கும் அளவுக்கு த.வெ.க. கணிசமான இடங்களை பிடித்தால், அது விஜய்க்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும். இதன் மூலம், த.வெ.க. ஒரு ‘கிங் மேக்கர்’ என்ற நிலையை பெற்று, ஆட்சியை நிர்ணயிக்கும் அதிகாரம் விஜய்யின் கைகளுக்கு வரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
