தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பு, அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக போன்ற பலமான கூட்டணிகள் உள்ள நிலையில், அனுபவம் குறைந்த ஒரு புதிய கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது ‘அரசியல் தற்கொலைக்கு’ சமம் என்று சில அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். விஜய்க்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் சில மூத்த ஆலோசகர்கள், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் என்னவென்றால், ஒரு புதிய கட்சிக்கு தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது இமாலய சவாலாகும்; இது இறுதியில் மற்ற பிரதான கட்சிகளுக்கு சாதகமாகவே முடியும் என்பதாகும்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் பல ஆண்டு கால தேர்தல் அனுபவம் மற்றும் வலுவான வாக்கு வங்கிகளைக் கொண்டுள்ளன. அவை கூட தனித்து போட்டியித் தயங்கி இருக்கிற கட்சிகளை எல்லாம் கூவிக்குடி அழைத்து, பெரும் கூட்டணிகளையே நாடுகின்றன. இத்தகைய சூழலில், விஜய் தனித்து போட்டியிட்டால் அவர் நிற்கும் தொகுதியில் அல்லது அவரது தனிப்பட்ட செல்வாக்கு மிகுந்த ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. மாநிலம் முழுவதும் பரவலான வாக்குகளை பெற்றாலும், அது தொகுதி வெற்றிகளாக மாறுவது கடினம். “விஜய் யாரையாவது ஜெயிக்க வைக்கவா கட்சி ஆரம்பித்தார்?” என்ற கேள்வி அவர் ஆதரவாளர்களிடமே எழ தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் அதிகாரத்தையும், மாநில அரசின் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பது என்பது ஒரு புதிய கட்சிக்கு மிகுந்த நெருக்கடியை தரும். டெல்லியில் உள்ள பாஜகவின் அரசியல் பலம் மற்றும் தமிழகத்தில் உள்ள திமுகவின் ஆளுமை ஆகிய இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் எதிர்த்து போர் புரிவது, கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் என விஜய்யின் நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதிகார பலம் கொண்ட இரு துருவங்களை ஒரே நேரத்தில் பகைத்து கொள்வது, தேர்தல் நேரத்தில் தேவையற்ற சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை உருவாக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு.
அரசியல் களத்தில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறினால், அது மறைமுகமாக ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையும். விஜய் தனித்து போட்டியிடுவதன் மூலம் பிரிக்கப்போகும் வாக்குகள், அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை பறித்து, மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வர வழிவகுக்கலாம் அல்லது திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரித்து பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திடலாம். இதனால், விஜய் ஒரு ‘கிங் மேக்கராக’ உருவெடுப்பதற்கு பதிலாக, மற்றவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் ஒரு கருவியாக மட்டுமே மாறிவிடக்கூடும் என்று விமர்சிக்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள், “பத்தோடு பதினொன்றாக” ஒரு கூட்டணியில் சேர்வதை விட, வலுவான ஒரு கூட்டணியை தலைமை ஏற்று நடத்துவதே புத்திசாலித்தனம் என்று கருதுகின்றனர். கூட்டணி வைப்பது என்பது கொள்கை சமரசம் அல்ல, அது ஒரு தேர்தல் வியூகம் என்பதை அவர்கள் விஜய்க்கு விளக்க முயன்று வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் எதிர்ப்பை சமாளிக்க தேவையான அரசியல் மற்றும் நிதி பலத்தை ஒரு கூட்டணியால் மட்டுமே தர முடியும் என்பது அவர்களின் வாதம்.
இருப்பினும், விஜய் தனது தனிப் பாதை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதுவரை தனது கட்சி நிர்வாகிகளிடம் அவர் தனித்து போட்டியிடும் முடிவையே வலியுறுத்தி வருகிறார். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் எதார்த்தமான அரசியல் சூழல்கள் அவரை ஒரு முடிவை எடுக்க தூண்டலாம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியலை முன்வைக்க விரும்பும் விஜய், இந்த நெருக்கடிகளை கடந்து தனது பலத்தை எப்படி நிரூபிக்கப் போகிறார் என்பதே 2026-ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
