வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி மற்றும் தமிழக வெற்றிக் கழக கூட்டணி என மூன்று முக்கிய கூட்டணிகள் போட்டியிட்டால் கண்டிப்பாக தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்றும், எனவே எடப்பாடி பழனிசாமி அல்லது விஜய் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து கூட்டணியாக சேர்ந்து போட்டியிட்டால் மட்டுமே தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும், இல்லையென்றால் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் எச்சரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க.வின் பலம் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலவீனம்
தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகள் 50 சதவீதம் இருக்கிறது என்றால், அதை அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றி கழகக் கூட்டணி மற்றும் நாம் தமிழர் என மூன்று கூட்டணிகளும் பிரித்து வாங்குகின்றன. எனவே, தி.மு.க. 30 சதவீதம் வாக்குகள் பெற்றால் கூட ஆட்சியை பிடித்துவிடும் நிலைதான் உள்ளது. எனவே, தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
தி.மு.க. எப்படி புத்திசாலித்தனமாக அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டு, பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டு, விஜய் எதிர்ப்பு ஓட்டு, சீமான் எதிர்ப்பு ஓட்டு என அத்தனை எதிர்ப்பு ஓட்டங்களையும் ஒட்டுமொத்தமாக ஒரே கூட்டணியில் அள்ளுகிறதோ, அதேபோல் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளையும் ஒரே கூட்டணிக்கு சென்றால் மட்டுமே போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி பேசி தீர்த்து, ஒரே கூட்டணியில் இணைந்தால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்றும், பா.ஜ.க. அந்த கூட்டணியில் இருப்பதை விஜய் விரும்பவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து நீக்கிவிட்டு விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. விஜய்யுடன் கூட்டணி சேராமல் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்றும், அதேபோல் விஜய்யும் தனித்து போட்டியிட்டு இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்றும், தனித்தனியாக போட்டியிட்டால் தி.மு.க. கூட்டணிக்குத்தான் லாபம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அரசியல் விமர்சகர்களின் அறிவுரை
இது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் கலந்து ஆலோசித்து, உண்மையாகவே தி.மு.க.வை வீழ்த்த வேண்டும், மக்களை மீட்க வேண்டும் என்றால், தங்களுடைய ‘ஈகோவை’ கைவிட்டுவிட்டு, முதலமைச்சர் வேட்பாளரை பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம். இப்போதைக்கு கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டும் செயல்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது அரசியல் விமர்சகர்களின் விருப்பமாக இருந்தாலும், முடிவெடுக்க வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி, விஜய் தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்த அறிவுரையை கேட்டு இணைவார்களா அல்லது தனித்தனியாக வாக்குகளை பிரித்து தி.மு.க.வை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்களா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
