சென்னை: சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்றுள்ளான் திருடன்..ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.. அப்போது போதையில் இருந்த திருடன் மொட்டை மாடிக்கு சென்று குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். இறுதியில் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.
சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வேலை முடிந்து அழகு நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். நேற்று காலை வழக்கம் போல் அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அழகு நிலையத்தின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது.
இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு அழகு நிலைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அழகு நிலையத்தில் சோதனை செய்தனர். ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது
ஆனால் அழகு நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து குறட்டை சத்தம் அதிகமாக வந்தது. போலீசார் மாடிக்கு சென்று பார்த்தபோது போதையில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை போலீசார் தட்டி எழுப்பினர். போலீசாரை கண்டதும் அவர் திடுக்கிட்டு எழுந்து ஓட முயன்றார்.
விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (வயது 44) என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார் கிஷோர். ஆனால் அழகு நிலையத்தில் அங்கு பணம், பொருட்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் போதையில் மொட்டை மாடிக்கு சென்று அயர்ந்து தூங்கி விட்டதாக கூறினார். ஷோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.