தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான ரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரியங்கா காந்தி அவர்கள் சோனியா காந்தியிடம் பேசி, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான முட்டுக்கட்டைகளை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் விஜய் மற்றும் பிரியங்கா காந்தி இடையேயான சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது நடந்தால், பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ், புதிய கூட்டணியை நோக்கி நகரக்கூடும்.
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய் பக்கம் சாயுமானால், அது ஒரு சங்கிலி தொடர் விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக, கூட்டணியில் அதிகார பகிர்வு மற்றும் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸின் முடிவை தொடர்ந்து தவெக கூட்டணிக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. திருமாவளவன் அவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், விஜய்யின் “ஆட்சியில் பங்கு” என்ற வாக்குறுதி விசிகவை ஈர்க்கும் முக்கிய காரணியாக அமையலாம். இது நிகழ்ந்தால், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் ஒரே புள்ளியில் இணைய வழிவகுக்கும்.
இந்த புதிய அரசியல் நகர்வு தமிழகத்தின் பாரம்பரிய இருமுனை போட்டியை மும்முனை போட்டியாக மாற்றும். அதிமுக – பாஜக கூட்டணி ஒருபுறம், திமுக தலைமையிலான கூட்டணி மறுபுறம், மற்றும் தவெக – காங்கிரஸ் – விசிக கூட்டணி என மூன்று அணிகளும் சமபலம் கொண்டவையாக உருவெடுக்கும். இதுவரை அதிமுக மற்றும் திமுக இடையே பிரிந்து கிடந்த வாக்குகள், இப்போது மூன்றாக சிதறும்போது தேர்தல் முடிவுகள் மிகவும் கணிக்க முடியாததாக மாறும். முக்கியமாக, திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பெரிய ஓட்டையை இந்த புதிய கூட்டணி ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணப்படாத ஒரு தொங்கு சட்டசபை உருவாவதற்கே 2026-ல் அதிக வாய்ப்புகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு தனிப்பட்ட கட்சியோ அல்லது கூட்டணியோ அறுதி பெரும்பான்மையான 118 இடங்களை எட்டுவது சவாலான காரியமாக இருக்கும். தவெக போன்ற புதிய சக்திகள் பெரும் வாக்கு சதவீதத்தை பெரும் பட்சத்தில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை ஏற்படலாம். இது தமிழக அரசியலில் ஒரு புதிய கலாச்சாரத்திற்கு வித்திடும்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை விட, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகளே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும். தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தவெக யாருக்கு ஆதரவு அளிக்கும் அல்லது காங்கிரஸும் விசிகவும் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் கிளைமாக்ஸாக இருக்கும். ஒருவேளை விஜய் கிங் மேக்கராக உருவெடுத்தால், அவர் முன்வைக்கும் ‘கூட்டாட்சி’ தத்துவம் நடைமுறைக்கு வரக்கூடும். இது தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப்போவது உறுதி.
மொத்தத்தில், பிரியங்கா காந்தியின் மற்றும் விஜய்யின் அரசியல் வியூகம் தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால திராவிட அரசியலை மாற்றியமைக்கும் ஒரு தொடக்கமாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் நடைபெறவுள்ள விஜய் – பிரியங்கா சந்திப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போதுதான் இந்த கூட்டணியின் உண்மையான வடிவம் தெரியவரும். அதுவரை தமிழக அரசியல் களம் யூகங்களாலும், வியூகங்களாலும் அதிரப்போவது நிச்சயம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
