சென்னை: தங்கம் விலை மீண்டும் தாருமாறாக ஏற தொடங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது திடீரென சரிந்த தங்கம் விலை, இப்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வேகமாக உயர்ந்து வருகிறது. வரும் காலத்தில் தங்கம் விலை எந்த அளவிற்கு உயரும், ஏன் தற்போது தங்கம் விலை வேகமாக உயருகிறது என்பது பற்றி பார்ப்போம்.
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. ஆனால் ஜூலை 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு பட்ஜெட் தாக்கலின் போது குறைத்தது. இதன் எதிரொலியாக அன்றைய தினமே தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
அதன்பின்னர் விலை சரிந்து ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலை மாறி ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தொடர்ந்து விலை குறைந்து ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் வாய்ப்பு உருவானது. ஆனால் எல்லாம் மாற தொடங்கி உள்ளது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது. கடந்த 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் சென்னையில் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 885-க்கும், ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது.
ஆனால் சென்னையில் நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 960-க்கும், ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. இந்த விலை உயர்வு புதிய வரலாற்று உச்சம் ஆகும். முன்னதாக கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 920-க்கும், ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனதுதான் அதிகபட்ச விலை ஆகும். தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.255-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் உயர்ந்துள்ளது
தங்கம் விலை உயர காரணம் என்ன?: அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது தான் தங்கம் விலை உயர முக்கிய காரணம் ஆகும். ஏனெனில் அமெரிக்காவை பின்பற்றி ஐரோப்பா நாடுகளின் மத்திய வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்துவிட்டன. இதனால் உலக நாடுகளில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே தங்கம் விலை மீண்டும் வேகமாக உயந்து , புதிய உச்சத்தை தொட்டுள்ளது . இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயருவதற்கான வாய்ப்புகளே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.