அவ்வளவும் தங்க நகை.. திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா சிக்கியது எப்படி

By Keerthana

Published:

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் கொடுக்க வந்தவர்களிடம் வாங்கி ரூ.42 லட்சத்துக்கு நகைகளை அடகு வைத்துள்ளார். இவர் எப்படி சிக்கினார். போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை பார்ப்போம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் 50 வயதாகும் கீதா இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து பணி மாறுதலாகி கடந்த பிப்ரவரி மாதம் திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ஆனார். இவருடைய கணவர் சரவணன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உசிலம்பட்டியைச் சேர்ந்த அபிநயா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகார் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தது. ராஜேஷ்-அபிநயா தம்பதியிடம் இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி வந்தார்.

கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இளம்பெண் அபிநயா, தன் திருமணத்தின்போது கணவர் ராஜேஷ் வீட்டாரிடம் கொடுத்த 95 பவுன் நகைகளை திருப்பி வாங்கி தரும்படி கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பின்பு வாலிபர் ராஜேஷ், 95 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

நகையை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, அந்த நகைகளை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அபிநயா தரப்பினர், ராஜேஷிடம் நகையை கேட்டுள்ளனர். நான் நகைகளை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லி விட்டதாக தெரிவித்துள்ளார். மனைவி குடும்பத்தினரிடம் நகைகள் சென்று சேராததை அறிந்த ராஜேஷ், அதுபற்றி இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ், மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்திடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா கொஞ்சம், கொஞ்சமாக நகைகளை திருப்பி தந்தார். மீதி 38 பவுன் நகைகளை திருப்பி தரவில்லை. இது குறித்து ராஜேஷ், மீண்டும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி விசாரணை நடத்தி, திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவை ணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இன்ஸ்பெக்டர் மீதி நகைகளை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் திருமங்கலம் டவுன் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கீதா திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஆவார். திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராகவும், இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.