சென்னை: 2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை முடித்து வைத்து விட்டதாக விருகம்பாக்கம் போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினார்கள்.
தன்னை ஏமாற்றி, 2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக சினிமா பைனான்சியர் கோபி, வினியோகஸ்தர் சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷ் ஆகியோருக்கு எதிராக, நடிகர் விமல், சென்னை விருகம்பாக்கம் போலீசில் முன்பு புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது விக்னேஷ் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் ஆய்வாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகும்படி இரு தரப்புக்கு அறிவுறித்தி, வழக்கை முடித்து வைத்து, நடவடிக்கை கைவிடப்பட்டதாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.