சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்

By Keerthana

Published:

சென்னை: பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மீது சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த 20 வயதாகும் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயிலைச் சேர்ந்த 16 வயதாகும் நிதிஷ் என்ற 16 ஐடிஐ மாணவருடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 10ம் தேதியான நேற்று இரவு பயிற்சி முடிந்து சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றார்களாம். அப்போது அங்கு மது போதையில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனாராம்.இதில் கிருபாகரனின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

தகவலறிந்து வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து கிருபாகரன் மற்றும் நிதிஷ் ஆகிய இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விபரங்களை சேகரித்தனர்.

விசாரணையில், தாக்குதல் நடத்தியது பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் உள்ளிட்ட 5 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி உள்ளதாக பிரபல ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மனோவின் மகன்களின் நண்பர்களை 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.