பூந்தமல்லியை அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை பறக்கவிட்டு சாதனை செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை பறக்க விட்டனர். அந்த ட்ரோன்கள் வானில் வர்ணஜாலம் காட்டியது பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
ஒரே நேரத்தில் கீழே இருந்து மேலே பறந்த அந்த ட்ரோன்கள் வண்ண வண்ண நிறங்களில் ஜொலித்த காட்சி பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் விண்ணில் பறந்தது மட்டுமின்றி விண்ணில் ஒரு சில உருவங்களையும் அது செய்து காட்டியது.
முதலில் ஹாய் என்று எழுத்துக்களுடன் தோன்றிய அந்த ட்ரோன்கள் அதன் பிறகு ரஜினிகாந்த் அப்துல் கலாம் உள்ளிட்ட உருவங்களையும் செய்து அசத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் குறித்த சில உருவங்களையும் இந்த ட்ரோன்கள் வரிசைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ட்ரோன்கள் படிப்படியாக கீழே இறங்கி வந்தது விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் நகர்ந்து வருவது போல் ஆச்சரியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பூந்தமல்லி செம்பரம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களின் இந்த சாதனையை அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
ட்ரோன்கள் தான் நமது இந்தியாவின் எதிர்காலம் என்றும் ட்ரோன்கள் மூலம் தான் அடுத்த தலைமுறைகள் அனைத்து பணிகளையும் செய்ய உள்ளார்கள் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ட்ரோன் கண்காட்சி நடத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இனி அடுத்த கட்டமாக இதைவிட அதிக ட்ரோன்களை பறக்க விட்டு விண்ணில் வர்ணஜாலம் காட்ட மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.