ஜூலை 18 தமிழ்நாடு நாள் என்று அழைக்கப்படுவதற்கான காரணமும் பின்னணியும் என்னவென்று தெரியுமா…?

By Meena

Published:

மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து செல்ல முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்படி நவம்பர் 1 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகள் பிரிந்து சென்றன.

பின்னர் அப்போது தமிழ்நாடு மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்நிலையில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், 12 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் இருந்தார். அதை அன்றைய முதல்வர் காமராஜர் நிராகரித்தார். இருந்தும் உண்ணாவிரதத்தை பின்வாங்காமல் தொடர்ந்த சங்கரலிங்கனார் போராட்டத்தின் 76-ம் நாளில் உடல் நிலை சரியில்லாமல் 1956-ம் ஆண்டு அக்டோபர் 13 தேதி உயிர்நீத்தார்.

அவரது மறைவுக்கு பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் தீர்மானம் கொண்டுவந்தனர். அதன் வாக்கெடுப்பு தோல்வியை சந்தித்தது. பிறகு 1961 ஆம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தை காமராஜர் தள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால் அதுவும் தோல்வியை தழுவியது.

அதன் பிறகு 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பேற்றார். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என்ற புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு 1968 நவம்பர் 23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு மொழி வாரியாக இந்தியவில் மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த தி.மு.க அரசின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய நாளான ஜூலை 18 ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என அறிவித்து கொண்டாடி வருகிறது.