ஆரம்பிக்கலாமா? இதுவரை பார்க்காத ஒரு எதிரியை திமுகவும் பாஜகவும் பார்க்கும்.. வெளுக்க போகிறார் விஜய்.. 2026ல் திமுக முடித்து வைக்கப்படும்: தவெக ராஜ்மோகன்

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான ராஜ்மோகன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக முடித்து வைக்கப்படும் என்றும், இதுவரை பார்த்திராத ஒரு எதிரியை திமுகவும், பாஜகவும் எதிர்கொள்ள…

rajmohan

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான ராஜ்மோகன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக முடித்து வைக்கப்படும் என்றும், இதுவரை பார்த்திராத ஒரு எதிரியை திமுகவும், பாஜகவும் எதிர்கொள்ள போகிறார்கள் என்றும், அரசியல் அழுக்குகளை நடிகர் விஜய் வெளுக்க போகிறார் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், கட்சி தொடங்கிய ஒரே வருடத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளே தவெகவை பார்த்து பயப்படுகின்றன. ஒரு கட்சி மிக வேகமாக பிரபலமடைந்து வருவதையும், அனைத்து கட்சிகளின் வாக்கு சதவீதத்தையும் கவர்ந்து வருவதையும் பார்த்து, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், த.வெ.க.வின் முக்கிய நிர்வாகியான ராஜ்மோகன், தனது சமீபத்திய பேட்டியில், “திமுகவும், அதிமுகவும் இதுவரை பார்த்திராத ஒரு பயங்கரமான எதிரியை பார்க்க போகின்றன. அரசியல் அழுக்குகளை விஜய் வெளுக்கப் போகிறார்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

2021 தேர்தலின் போது திமுக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தது. ஆனால், அவற்றில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. “நீட் தேர்வு பிரச்சினை முடித்து வைக்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் முடித்து வைக்கப்படும்” என்று பல வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால், 2026ல் திமுகதான் முடித்து வைக்கப்படும் என்று தமிழக வெற்றி கழகத்தின் ராஜ்மோகன் உறுதியுடன் தெரிவித்தார்.

“விஜய்க்கு அரசியல் தெரியாது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு கள அரசியல் மட்டுமல்ல, நில அரசியல், லாபி அரசியல், காலங்காலமாக இருக்கும் வாரிசு அரசியல், மதவாத அரசியல், பிளவுபடுத்தும் அரசியல், வெளியில் நட்பு பாராட்டி உள்ளுக்குள் எதிரியாக இருக்கும் அரசியல், சென்னையில் மோடிக்கு பயமில்லை, ஈடிக்கும் பயமில்லை என்று கூறிவிட்டு டெல்லியில் போய் காலில் விழும் சந்தர்ப்பவாத அரசியல் என அனைத்தையும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய மிகப்பெரிய சாதுர்யம் தளபதி விஜய்க்கு உண்டு” என்று ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

“தாத்தா, அப்பா, அப்பாவுடைய அண்ணன், தங்கச்சி, அத்தை பையன், பங்காளி வீட்டு பசங்கள் என ஏழு பேர் முதல்வர், துணை முதல்வர், எம்.எல்.ஏ., எம்.பி. என பல பதவிகளை பெற்றிருக்கும் ஒரே குடும்பம் உலகத்திலேயே கருணாநிதி குடும்பம்தான்” என்று ராஜ்மோகன் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

“பாஜக இந்தியாவுக்கு ஆபத்து என்று வெளியில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், டெல்லியில் கேம்ப் போட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்திப்பார்கள்” என்று கூறிய ராஜ்மோகன், “அதிமுக வெளியில் தெரிகிற தேர்தல் கூட்டணி கட்சி. ஆனால், திமுக வெளியில் தெரியாத அரசியல் கூட்டாளி” என்றும் தனது பதிலில் குறிப்பிட்டார்.

“விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளார். ஆனால், மற்ற கட்சிகளிலிருந்து யாருமே இன்னும் அவரது கட்சிக்கு வரவில்லையே?” என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், “எங்கள் கட்சிக்கு யாரும் வந்த மாதிரி உங்களுக்கு தெரியவில்லை அல்லவா? அது தெரியாமல் இருப்பதுதான் எங்களுடைய அரசியல்” என்றும் கூறினார்.

“திமுகவை வீழ்த்துவதற்கு எங்களுக்கு கூட்டணி கட்சிகள் தேவையில்லை. எங்கள் தலைவர் விஜய் ஒருவரே போதும். திமுகவை தனியொரு சக்தியுடன் சேர்ந்து நாங்கள் வீழ்த்துவோம்” என்றும் அவர் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார்.