திமுகவுக்கு எதிரான கூட்டணியா? தேவையில்லை.. திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்போம்: விஜய்

  திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு கூட்டணி அமைப்பதை விட, திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒரே பக்கமாக திருப்பினால் மிக எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற ராஜதந்திரத்தில் தற்போது விஜய் செயல்படுவதாக…

vijay vs stalin

 

திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு கூட்டணி அமைப்பதை விட, திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒரே பக்கமாக திருப்பினால் மிக எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற ராஜதந்திரத்தில் தற்போது விஜய் செயல்படுவதாக தெரிகிறது.

அந்த வகையில்தான் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுக்க முழுக்க திமுகவை கடுமையாக விமர்சித்து குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது, 2026 ஆம் ஆண்டு தேர்தலே திமுகவா? தவெகவா? என்ற நிலை மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற கட்சிகள் எல்லாம் களத்தில் இருப்பதே தெரியாத நிலையில், திமுகவுக்கு எதிரான ஒட்டுமொத்த வாக்குகளை விஜய் ஈர்த்துவிட்டால், இது தமிழக அரசியலுக்குள் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்.

அந்த வகையில், இன்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கைகள், திமுகவை எந்த அளவுக்கு விமர்சித்திருக்கிறார் என்பதை பாருங்கள். அந்த அறிக்கை பின்வருமாறு:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள். ஊர்ப்புற நூலகர்கள். கணினி உதவியாளர்கள்.

சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.

எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள். விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.