கோவை : தினமும் நம் வீட்டில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்று குப்பைக் கிடங்கில் சேர்க்கின்றனர். சுத்தம் தெய்வ பக்திக்கு அடுத்தபடி என்று சொல்லும் அளவிற்கு இவர்களின் பணி மகத்தானது. இவ்வாறு நம் வீட்டில் சேரும் குப்பைகளுடன் தவறுதலாக சில பொருட்களையும் சேர்த்து குப்பைகளில் போட்டு விடுகிறோம். மீண்டும் அதைத் தேடும் போது கிடைப்பதில்லை. இதனால் பல வகைகளில் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கோவை, கோவைப்புதூர் 98-வது வார்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்வீட்டைச் சுத்தம் செய்து குப்பைகளுடன் பிளாஸ்டிக் கவரில் இருந்த 6 பவுன் தங்கச் செயினையும் தவறுதலாக அந்தக் குப்பைகளுடன் சேர்த்து குப்பையில் போட்டுள்ளார். அதன்பின் அந்த செயினைத் தேடிய போது, காணவில்லை.
உடனே பதட்டமடைந்த அவர் வீடு முழுக்க தேடியிருக்கிறார். அப்படியும் அவரது செயின் கிடைக்கவில்லை. பின் நிதானமாக யோசித்த போது குப்பைகளுடன் சேர்த்து போட்டிருக்கலாம் என நினைத்து அப்பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்திருக்கிறார்.
கவுன்சிலர் தூய்மைப் பணியாளர்களை அழைத்து விபரத்தினைக் கூற, அப்பகுதியில் சேகரித்த சுமார் ஒன்றரை டன் குப்பைகளையும் மீண்டும் கீழே கொட்டி தேடியிருக்கின்றனர் அப்பகுதி தூய்மைப் பணியாளர்களான ராணி, சத்யா மற்றும் சாவித்திரி ஆகியோர்.
செயின் உரிமையாளர் நினைத்தது போலவே கவரில் குப்பைகளுடன் 6 பவுன் தங்கச் செயின் இருக்க நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் தனது நகையை மீட்டுக் கொடுத்த கவுன்சிலர் உதயகுமார் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னையில் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த வைர நெக்லஸை ஒருவர் இதேபோல் குப்பையில் தவறுதலாகப் போட அந்தப் பகுதி தூய்மைப் பணியாளர் அந்த வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் தனியார் அமைப்பினர் பாராட்டி ஊக்கத் தொகை வழங்கினர்.