சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக 17,595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தமிழக சட்டசபையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “இளைஞர் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருவது திமுக ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிக கவனமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகிறேன்..
தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசு திமுக அரசு. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் என தேர்வு முகமைகள் வாய்யிலாக 32,774 நபர்களுக்கு அரசு துறைகளில் நேரடி பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32,709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து உள்ளோம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடுதான் இதனை இந்த சட்டசபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது. இது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக்கூடிய “நான் முதல்வன் திட்டம்” மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஓர் ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த இரண்டையும் சேர்த்து, தமிழக அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக 17, 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும்.
அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30,219 பணியிடங்களும் நிரப்பப்படும்.
இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.