சென்னை மெட்ரோ ரயிலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்படி 20% கட்டண தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்டரில் காகித அடிப்படை முறையில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் டிக்கெட் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மார்ச் 1ஆம் தேதிக்கு முன்பு, மெட்ரோ டிக்கெட் கவுண்டரில் 20 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக டிக்கெட் வாங்கினால், 10% தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய புதிய மாற்றத்தின் படி, இனிமேல் குழு டிக்கெட்டுகள் மொபைல் செயலி மூலம் மட்டுமே கிடைக்கும். QR கோட் அடிப்படையிலான இந்த டிக்கெட்டுகளில் பயணிகள் 20% தள்ளுபடி பெறலாம். எனவே, குழுவாக பயணம் செய்பவர்கள் மொபைல் செயலியில் சென்று டிக்கெட் எடுத்தால், 20% கட்டண சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
CMRL தனது பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க விரும்புவது என்னவெனில் குழு பயணிகளுக்கான (20 பேர் மற்றும் அதற்கு மேல்) காகித அடிப்படையிலான குழு டிக்கெட் 10% தள்ளுபடியில் டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படும் வசதி 1.3.2025 முதல் நிறுத்தப்படுகிறது. இது, டிஜிட்டல் டிக்கெட் முறைக்கு மாறுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இருப்பினும், இதே வசதி CMRL மொபைல் செயலியில் QR குழு டிக்கெட் மூலம் கிடைக்கும், மேலும் 20% தள்ளுபடியுடன் பெறலாம்.
மெட்ரோ பயணிகள் வழங்கும் தொடர்ந்து ஆதரவு மற்றும் பெருகும் பயண அணுகுமுறைக்கு நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். மெட்ரோ ரெயில் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த, CMRL உறுதியாக செயல்படும்.
இந்த மாற்றம், மெட்ரோ பணிகளை எளிதாக்குவதுடன், காகித டிக்கெட்டுகளின் பயன்பாட்டை குறைக்கும். பயணிகள் CMRL மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன் மூலம், குழு டிக்கெட் சேவையைப் பெறவும், அதிக தள்ளுபடியை அனுபவிக்கவும் முடியும்.