சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் லூலு ஹைப்பர் மார்க்கெட் பணிகள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள கிரேஸ் சர்வீஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்ட்ரல் மற்றும் ஷெனாய் நகர் ஆகிய இரண்டு நிலையங்களிலும் உணவகங்கள், துணி வர்த்தகங்கள், பல்வேறு சில்லறை கடைகள், எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவை கிடைக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 600 இருக்கைகள் கொண்ட தியேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது நகரத்தில் உள்ள திரையரங்குகளைப் போலவே புதிய திரைப்படங்கள் வெளியிடும் வகையில் உருவாக்கப்படுகிறது. போதுமான இருக்கைகள் மற்றும் விரிவான வாகன வசதியுடன் இந்த தியேட்டர் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் சதுர அடியில் ஷெனாய் நகர் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். 40 ஆயிரம் சதுர அடியில் சென்னை சென்ட்ரல் ஹைப்பர் மார்க்கெட் அமையும். விம்கோ நகரில் 60 ஆயிரம் சதுர அடியில் ஹைப்பர் மார்க்கெட் உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களும் இந்த ஹைப்பர் மார்க்கெட்டில் இடம்பெறும். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் மட்டுமின்றி, பிற பொதுமக்களும் வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஹைப்பர் மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.