திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்

By Keerthana

Published:

சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால், வயநாடு போல், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக திருப்பூரைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கவுதம் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், சாலை அமைப்பது தொடர்பான அறிவிப்பில் 3 கிலோ மீட்டர் 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலை அமைப்பதாக கூறியிருந்தாலும், உண்மையில், திருமூர்த்தி மலைக்கும், குருமலைக்கும் இடையிலான தூரம் 8 கிலோ மீட்டர் ஆகும்.

ஏற்கனவே காங்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்து விடும்.

வாகனப் போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடிச் செல்லும் விலங்குகள் உயிருக்கு ஆபத்தாகி விடும். அத்துடன் புதிய சாலையால் நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால், வயநாடு போல், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனுதாரர் கௌதம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.