கோவை கொடீசியா அரங்கத்தில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் தொழிலதிபர்களுடன் ஜி.எஸ்.டி. குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சரிடம் “இனிப்புக்கு 5% ஜி.எஸ்.டி இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி இருக்கிறது.
அதேபோல் சாதாரண பன்னுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஆனால் அதில் வைக்கப்படும் கிரீமுக்கு 18% ஜி.எஸ்.டி-ன்னு வாடிக்கையாளர் சொல்றாரு.. தொழில் நடத்த முடியல மேடம்.. பில் போடனும்னா கம்ப்யூட்டரே திணறுது மேடம்..” என்று பேசியிருந்தார். அரங்கத்தில் இதனைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும் வானதி சீனிவாசன் பற்றியும் பேசியிருந்தார்.
தொழிலதிபர் சீனிவாசனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நேற்று அவர் மீண்டும் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் சூடுபிடித்தது. கேள்வி கேட்டால் இப்படித்தான் மன்னிப்பு கேட்க வைப்பீர்களா? என்ற கோணத்தில் பாஜகவை விமர்சித்தனர்.
தற்போது இந்த வீடியோவுக்கு வானதி சீனிவாசனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். வானதி சீனிவாசன் கூறும் போது, “தொழிலதிபர் சீனிவாசன் என்ன பேசினார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் தொடர்ச்சியாக எனக்குப் போன் செய்து நான் பேசியது தவறாக பரப்பப்பட்டு வருகிறது. எனவே நிதியமைச்சரைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். எனக்கு நேரம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டார். அதன்படி நானும் நிதியமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.“ என்று கூறினார்.
இதுபற்றி அண்ணாமலை கூறும் போது, “தொழிலதிபரும், நிதியமைச்சரும் பேசிய தனிப்பட்ட வீடியோவை கட்சியினர் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். அன்னபூர்ணா உணவக உரிமையாளரை போனில் தொடர்பு கொண்டு வருத்தத்தைத் தெரிவித்தேன். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தமிழக தொழில்துறையின் முக்கியமான நபர். இந்த விவகாரத்தினை இத்துடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டுகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.