அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் இணைந்திருக்கும் விவகாரம், அ.தி.மு.க.வின் உட்கட்சி அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலத்திலும் பெரும் கேள்வி குறியை எழுப்பியுள்ளது. செங்கோட்டையனின் இந்த திடீர் நகர்வு, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் தவெக இணைய இனி வாய்ப்பு இல்லை என்பதை சூசகமாக உறுதிப்படுத்தி விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க.வின் மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான அணுகுமுறையே என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையன் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவதற்கு முன், டெல்லி சென்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர்களை, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில், அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களை அரவணைத்து செல்லும்படி பா.ஜ.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாஜக தலைமை இதுகுறித்து பேசியும் ஈபிஎஸ் தரப்பு சமரசம் செய்ய மறுத்ததால், செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
பா.ஜ.க. மேலிடத்தின் கோபத்திற்கான முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான அணுகுமுறையே ஆகும். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த, கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள ஒரு தலைவரை இழப்பது கூட்டணியின் பலத்தை பாதிக்கும் என்பதை பா.ஜ.க. மேலிடம் சுட்டி காட்டியது. ஆனால், தேர்தல் நேரத்தில் அனைவரும் தேவை என்ற எண்ணம் ஈபிஎஸ் இடம் இல்லை என்றும், தனக்கு எதிராக செயல்படும் அல்லது சந்தேகப்படும் நபர்களை அப்பட்டமாக ஒதுக்குவதுமே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்றும் பா.ஜ.க. மேலிடம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் நோக்கர்கள், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான முடிவுகள் அ.தி.மு.க.வுக்கு தொடர்ச்சியான பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக விமர்சிக்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகும், ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் மற்றும் டி.டி.வி. தினகரனை அரவணைத்து செல்ல மறுத்து வாக்குகளை பிரித்து தோல்வியை சந்தித்த அனுபவத்திற்கு பிறகும், அனைவரையும் அரவணைத்து செல்லும் குணத்தில் அவர் திருந்தவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. செங்கோட்டையனின் விலகல், கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை த.வெ.க.வுக்கு திருப்பிவிடும் வாய்ப்புள்ளது, இது அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும்.
செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் இணைவது, தி.மு.க.வுக்கு ஒரு வலுவான எதிர்க்கட்சியாக த.வெ.க.வை நிறுத்துகிறது. எனவே, வரவிருக்கும் தேர்தல் உண்மையாகவே தி.மு.க. – த.வெ.க. இடையேயான நேரடி போட்டியாக உருவெடுக்குமானால், அ.தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் பின்னுக்கு தள்ளப்படும் அதாவது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. இந்த மொத்த அரசியல் விளையாட்டிலும், ஈபிஎஸ் தன் பிடிவாதத்தை இவ்வளவு பெரிய அரசியல் இழப்புக்கு பிறகும் தளர்த்தி கொள்ளத் தயாராக இல்லை என்பது, அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்தை பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
