தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் கூட்டணி கணக்குகள், 2026 சட்டமன்த் தேர்தலை முன்னிட்டு பெரும் குழப்பத்தையும் அதே சமயம் ஒரு பொன்னான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரு கட்சிகளுமே நீண்ட காலமாக தங்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்து அதிருப்தியில் இருப்பதை மறைக்க முடியவில்லை. 25 தொகுதிகள் கிடைத்தால் என்ன, 6 தொகுதிகள் போனால் என்ன? என்ற கேள்வி இப்போது தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. வெறும் இடப்பங்கீட்டை தாண்டி, எப்போது சொந்த காலில் நிற்பது அல்லது ஒரு கூட்டணியை தலைமை தாங்குவது என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராகுல் காந்தியும், திருமாவளவனும் உள்ளனர்.
திமுகவின் நிழலில் நீண்ட காலம் பயணிப்பதன் மூலம் அந்த இரு கட்சிகளுமே தங்களின் தனித்துவமான அடையாளத்தையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் கனவையும் இழந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் சமீபகாலமாக ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையை தீவிரமாக முன்வைத்து வருகிறார். அதேபோல், தமிழகத்தில் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், திமுகவின் மேலாதிக்கத்திற்கு பணிந்து போவதால், இவர்களால் ஒருபோதும் தலைமை பண்பை எட்ட முடிவதில்லை. இந்த சூழலில், இவர்கள் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், கடைசி வரை திராவிட கட்சிகளின் துணை அமைப்புகளாகவே இருக்க வேண்டியிருக்கும்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் களத்தில் ஒரு புதிய மாற்றாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் விசிக எடுக்கும் முடிவுகள் தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றக்கூடும். தவெக, காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும். விஜய்யின் மக்கள் செல்வாக்கு, காங்கிரஸின் தேசிய முகம் மற்றும் விசிகவின் அடிமட்டத் தொண்டர் பலம் ஆகியவை ஒன்றிணைந்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது எட்டாக்கனி அல்ல. இது ஒரு சக்திவாய்ந்த மூன்றாவது அணி உருவாவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
ரொம்ப காலமாக தங்களை வெறும் ‘வாக்கு வங்கி’யாக மட்டுமே பயன்படுத்தும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, விஜய்யுடன் கைகோர்ப்பது ராகுல் காந்திக்கும் திருமாவளவனுக்கும் ஒரு கௌரவமான அரசியலை தரும். ஆட்சியில் பங்கேற்பது மற்றும் கொள்கை ரீதியான அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது போன்றவற்றை ஒரு புதிய கூட்டணியில் சாத்தியப்படுத்த முடியும். குறிப்பாக, தவெக தலைவர் விஜய் அதிகார பகிர்வு குறித்து வெளிப்படையாக பேசி வருவது, இந்த இரு கட்சிகளுக்கும் சாதகமான அம்சமாகும். தங்களின் பலத்தை உணர்ந்து, ஒரு புதிய அச்சை உருவாக்க வேண்டிய தருணம் இது.
இருப்பினும், இத்தகைய முடிவை எடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ராகுல் காந்தி தேசிய அரசியலை கருத்தில் கொண்டு திமுகவின் ஆதரவை தவிர்க்க தயங்கலாம். அதேபோல், திருமாவளவன் தனது தலித் அரசியல் அடையாளத்தை சிதைக்காத வகையில் ஒரு கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், காலம் கடந்து எடுக்கும் முடிவுகள் அரசியலில் பயனற்றவை. வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்தி கொள்ளாதவர்கள் வரலாற்றில் பின்தங்கிவிடுவார்கள். பொன்னான வாய்ப்பை இவர்கள் பயன்படுத்துவார்களா அல்லது பழைய பாணியிலேயே திமுகவின் பின்னால் செல்வார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
இறுதியாக, தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு இப்போது இந்த தலைவர்கள் கையில் உள்ளது. வெறும் தொகுதிகளுக்காக பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, கொள்கைக்காகவும் அதிகார பகிர்வுக்காகவும் களம் காணும் தைரியம் இவர்களுக்கு இருக்க வேண்டும். தவெக பக்கம் இவர்கள் சாய்ந்தால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை உருவாக்கும். கைநழுவி போகும் இந்த வாய்ப்பை இவர்கள் மீட்க தவறினால், 2026 தேர்தல் இவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் பின்னடைவாகவே அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
