அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது நம்பிக்கைக்குரியவரான எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு இடையேயான அரசியல் உறவு குறித்த புதிய யூகங்கள் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளன. இதற்கு முக்கிய காரணம், எஸ்.பி. வேலுமணியின் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 18 மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதே ஆகும்.
எஸ்.பி. வேலுமணியின் மகனின் திருமணவிழாவில் மத்திய அமைச்சர்கள் மட்டும் அல்லாமல், கொங்கு பகுதியில் உள்ள அனைத்து முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் வணிக பிரமுகர்களும் பெருமளவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முன்னாள் மாநில அமைச்சரின் குடும்ப விழாவில் இவ்வளவு பெரிய தேசிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பது என்பது, தமிழக அரசியல் களத்தில் வழக்கத்திற்கு மாறான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் மற்றும் மிகப்பெரிய அரசியல் அணிவகுப்பானது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற கேள்விகளை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர். சமீப காலமாக, அதிமுக – பாஜக உறவில் சில சலசலப்புகள் நிலவி வரும் நிலையில், இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் பாஜகவின் திட்டங்களுக்கு அதிமுக தலைமை முழு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் அல்லது கூட்டணியில் பாஜக கேட்கும் இடங்களை வழங்க தயக்கம் காட்டும் பட்சத்தில், இந்த வருகை ஒரு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி கொங்கு மண்டலத்தின் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுவதால், அவரது பலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
சில அரசியல் வட்டாரங்கள், ‘நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், எஸ்.பி. வேலுமணி தான் அடுத்த முதல்வர் வேட்பாளர்’ என்ற ஒரு மறைமுக பயமுறுத்தலை மத்திய பா.ஜ.க தலைமை விடுக்கிறதோ என்றும் யூகிக்கின்றனர். இந்த கூட்டம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓர் உறுதியான மாற்று குரலை உருவாக்கி, அதிமுக தலைமையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய அரசு முயல்வதற்கான ஓர் அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், எஸ்.பி. வேலுமணி மகனின் திருமண நிகழ்வு வெறும் குடும்ப விழாவாக மட்டும் இல்லாமல், தமிழக அரசியல் மற்றும் அதிமுக – பாஜக கூட்டணியின் எதிர்கால பாதையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய சந்திப்பாக அமைய போகிறது என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை. இதனால், அடுத்த சில நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
