வீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்பு

By Keerthana

Published:

சென்னை: 3,500 சதுரடி வரையிலான வீடுகள் கட்டுவதற்கு 2 மாதங்களில் சுயசான்றிதழ் முறையில் 9,009 பேருக்கு உடனடி கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த சில நொடிகளில் அனுமதி கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கட்டிட வரைபட அனுமதி பெறுவதில் மக்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தார்கள். அரசு அலுவலங்களில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளை களைவதற்காக சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் 2,500 சதுரடி மனையில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடியாக கட்டிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு அதற்குரிய கட்டணத்தை செலுத்திய சில நொடிகளிலேயே சுயசான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை (அதாவது 60 நாட்களில்) மொத்தம் 9 ஆயிரத்து 9 பேருக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு மாதத்தில் 4 ஆயிரத்து 500 பேர் கட்டிட அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் இந்த திட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று கட்டிட அனுமதி பெறும் போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,500 பேருக்குதான் கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்கள் முன்பு சராசரியாக ஒரு கட்டிட அனுமதி பெறுவதற்கு மக்களுக்கு குறைந்தபட்சம் 50 நாட்கள் வரை ஆனது. ஆனால் இப்போது நொடியில் அனுமதி கிடைத்து விடுகிறது. அத்துடன் இடைத்தரகர்கள் தலையீடு நிறுத்தப்பட்டு லஞ்ச-லாவண்யம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் தினமும் கண்காணித்து வருகிறாராம். அதேபோல் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் ஆகியோர் இந்த திட்டத்தை தினமும் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்களாம்.

இந்த திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளதால் அதனை இன்னும் மேம்படுத்தும் பணிகளில் அரசு இறங்கிஉள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத மக்களின் வசதிக்காக இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வர அரசு முடிவுவ செய்துள்ளது. அதேபோல் இணையதளத்தில் பத்திரங்கள் மற்றும் பட்டாக்களை பதிவு செய்யாமல் அந்த எண்களை கொடுத்தால் தானாகவே பதிவாகும் முறையும் அமல்படுத்தப்பட இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி பெறும் பயனாளிகளை முதல்வரின் தனிப்பிரிவில் உள்ள அலுவலர்கள் தொடர்பு கொண்டு கருத்து மற்றும் ஆலோசனைகளை கேட்டு வருகிறார்களாம். அதன் அடிப்படையில் சில மாற்றங்களும் இணையதளத்தில் செய்யப்பட்டு வருகிறதாம்.

இந்த சுயசான்றிதழ் கட்டிட அனுமதி பெறுவதற்கு https://onlineppa.tn.gov.in/SWP-web/login என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதில் நில உரிமை ஆவணம், பட்டா மற்றும் கட்டுமான பகுதி நடைபெற உள்ள இடத்தின் புகைப்படம், கட்டிட வரைபடம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து விட்டால், நாம் செலுத்த வேண்டிய கட்டண விவரம் வரும்

நாம் பணத்தை செலுத்தியவுடன் சுயசான்றிதழ் கட்டிட அனுமதியை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் என்ஜினீயர்களிடம் வரைபடத்தை வாங்கி தாங்களாகவே இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...