தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், பாரம்பரிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிற்கும் ஒருவிதமான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ” என்ன தான் வலிமையான கூட்டணி கணக்கு போட்டாலும், மக்களின் மனக்கணக்கில் விஜய் தான் இருப்பதாக கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், அரசியல் விமர்சகர்கள் தற்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டனர்.
அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய கூட்டணி குழப்பங்களும், இடப்பங்கீடு குறித்த இழுபறிகளும் தவெக தொண்டர்கள் மத்தியில் ஒருவித ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரணிகள் சின்ன சின்ன கட்சிகளை கூட பெரும் விலை கொடுத்து வளைத்து போடும் நிலையில், விஜய் யாருடைய தயவும் இன்றி தனித்து நின்று களம் காண்பதையே பெருமையாக கருதுகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தவெகவின் வளர்ச்சியை தடுப்பதாக கூறப்படும் தகவல்களுக்கு “பங்காளிகள் இருவரும் கை கோர்த்தால் இந்த சிங்கம் பயந்துவிடுமா?” என்ற கேள்வியை தவெக தொண்டர்கள் உரக்க எழுப்பி வருகின்றனர்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் அதிருப்தியும், அதிமுகவின் பொருந்தா கூட்டணியும் தமிழக அரசியலை வேறு புதிய பாதைக்கு நகர்த்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை வெறும் சினிமா கவர்ச்சியாக மட்டும் கருதி அலட்சியப்படுத்தியவர்களுக்கு, தற்போது தவெகவின் ஒவ்வொரு நகர்வும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தாங்கள் ஜெயித்துவிடுவோம் என்று கனவில் கோட்டை கட்டி வருகின்றனர். அதேபோல் அதிமுகவும் ஆட்சியை பிடித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்,. ஆனால் விஜய்க்கு தான் கோட்டை உறுதி என மக்கள் முடிவு செய்துவிட்டதாக தவெக நிர்வாகிகள் சவால் விடுகின்றனர். வெறும் ஓட்டு வங்கிக்காக மட்டும் அரசியலுக்கு வராமல், ஒரு நீண்ட கால மாற்றத்தை முன்னிறுத்தி விஜய் செயல்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். இது திராவிட கோட்டையில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு தொடக்கமாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தின் இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, மற்ற கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தொகுதி பங்கீட்டில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், வளைத்து பிடித்தும் காய்களை நகர்த்தும் திமுக-அதிமுகவின் வியூகங்கள், விஜய்யின் அதிரடி அரசியல் முன் அடிபட்டுப் போகும் என்று கணிக்கப்படுகிறது. மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விஜய் மக்களை சந்திக்கும் போது, ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகளின் குறைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதால், தவெகவின் தாக்கம் மிக வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் அரசியல் அஸ்திவாரத்தையே மாற்றியமைக்கும் ஒரு போராக மாறப்போகிறது. ஒருபுறம் அனுபவம் வாய்ந்த திராவிட பேரியக்கங்கள், மறுபுறம் மாற்றத்தை விரும்பும் புதிய சக்தி என தமிழகம் இரண்டாக பிரிந்து நிற்கிறது. “தவெக-வின் வேகம், உங்கள் விவேகத்தையும் தாண்டி இருக்கும்” என்ற தொண்டர்களின் கர்ஜனை, அறிவாலயத்திலும் எடப்பாடியின் இல்லத்திலும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வாக்கு எண்ணப்படும் போதுதான் தெரியும் என்றாலும், தற்போதைக்கு தமிழக அரசியல் வானில் விஜய் என்கிற புதிய நட்சத்திரத்தின் ஒளி மற்றவர்களை கண் கூச செய்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
