மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்பதை மீண்டும் உறுதி செய்ததாகவும், பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறும் என்று அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதாகவும், ஊடகங்கள் மற்றும் “அரசியல் வியூக நிபுணர்கள்” என்ற பெயரில் உள்ள தி.மு.க. ஆதரவாளர்கள் பல ஊடகங்களிலும், யூடியூப் சேனல்களிலும் பேசி வருகின்றனர். ஆனால், அமித்ஷா அப்படி சொல்லவே இல்லை என்பதுதான் உண்மை. அவர் சொன்னதை வேண்டுமென்றே திரிபுபடுத்தி, மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நேற்றைய பேட்டியின்போது அமித்ஷாவிடம் கேட்கப்பட்டது இதுதான்: If you win will you join the government? அதற்கு அமித்ஷா yesஎன்று பதிலளித்தார். அதாவது உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், நீங்கள் அமைச்சரவையில் பங்கு பெற விரும்புகிறீர்களா?” என்ற கேள்விதான் கேட்கப்பட்டது. யாராவது இந்த கேள்விக்கு “இல்லை” என்று பதிலளிப்பார்களா? அமைச்சரவையில் இடம் பெற எல்லோருக்கும் ஆசை இருக்கும் தானே? அந்த ஆசையைத்தான் அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், “அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என்று உறுதி செய்ததாகவும், பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறும் என்று உறுதிபட கூறிவிட்டதாகவும்” ஊடகங்கள் மற்றும் “அரசியல் வியூக நிபுணர்கள்” என்ற பெயரில் உள்ள போலியானவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். தமிழக ஊடகங்கள் மட்டுமே பொய்ச்செய்திகளை பரப்பி வரும் வரும் நிலையில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள், தேசிய டிவி சேனல்கள் எல்லாம் சரியாக தான் செய்தியை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே கேள்வியை ராகுல் காந்தியிடம், “தி.மு.க. கூட்டணி வென்றால் அதில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டால், ராகுல் காந்தி “இல்லை” என்றா சொல்வார்? “ஆமாம்” என்றுதானே சொல்வார்? அதே பதிலைத்தான் அமித்ஷாவும் சொல்லியுள்ளார். ஆனால், தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஒட்டுமொத்த மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தள அரசியல் வியூக நிபுணர்கள் என்ற பெயரில் இருக்கும் தி.மு.க.வின் ஆதரவாளர்கள், இதை ஒரு பெரிய பிரச்சினையாக கிளப்பி, அமித்ஷா சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறி வருகின்றனர்.
“அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா?” என்ற கேள்விக்கு “ஆம்” என்று பதில் சொன்னதை வைத்து, “அ.தி.மு.க.வை கேவலப்படுத்திவிட்டார்,” “அ.தி.மு.க.வை அடிமைப்படுத்திவிட்டார்,” “அ.தி.மு.க.வை கவலைக்கிடமாக்கிவிட்டார்,” “எடப்பாடி பழனிச்சாமியை அவமானப்படுத்திவிட்டார்” என்று பல்வேறு தலைப்புகளில் செய்திகளை போட்டு வருகின்றனர். ஊடகங்கள் உண்மையான செய்தியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் அன்றுதான் இந்த நாடு உருப்படும். தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் தவறு செய்தாலும் கூட, அதை மறைத்து செய்தியை வெளியிடும் ஊடகங்கள், தங்களுக்கு பிடிக்காத தலைவர்கள் நல்லதாக ஒன்றை சொன்னால் கூட, அதைத் திரித்து செய்திகளை வெளியிட்டு வருவதாகத்தான் நடுநிலை ஊடகவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், மக்கள்தான் இதில் சுதாரிப்பாக இருக்க வேண்டும். உண்மையிலேயே அமித்ஷா என்ன சொன்னார், அவர் சொன்னதைத்தான் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்த்தாலே, கிட்டத்தட்ட பல ஊடகங்களின் போலியான முகங்கள் வெட்ட வெளிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.