ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த டிசம்பர் 18 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்து மூன்று நாட்களாகியும், தமிழக ஊடகங்களில் விஜய்யின் பேச்சுதான் இன்னும் பிரதான தலைப்பு செய்தியாக நீடிக்கிறது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய விஜய், ஆளுங்கட்சியான திமுகவை ‘தீய சக்தி’ என்றும், தனது கட்சியை ‘தூய சக்தி’ என்றும் நேரடியாக சாடியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காலை நேர விவாதங்கள் முதல் இரவு நேர செய்திகள் வரை அனைத்து அலைவரிசைகளும் விஜய்யின் பேச்சை சுற்றியே சுழன்று வருகின்றன. “விஜய் பேசியதில் புதிய விஷயம் என்ன?” என்ற கேள்வியுடன் தொடங்கும் விவாதங்கள், இறுதியில் 2026-ல் திமுகவிற்கு அவர் ஒரு பலமான சவாலாக இருப்பார் என்ற முடிவிலேயே முடிகின்றன.
அரசியல் விமர்சகர்கள் விஜய்யின் பேச்சை இருவேறு துருவங்களாக நின்று விவாதித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், விஜய் தனது பேச்சில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சொல்லாடல்களை பயன்படுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியை தன்பக்கம் இழுக்க முயல்வதாக கருதுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, கொள்கை அளவில் பெரியாரை பின்பற்றுவதாகக் கூறிவிட்டு, நடைமுறை அரசியலில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரை துணைக்கு அழைப்பது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என விமர்சிக்கின்றனர்.
சமூக வலைதளங்களிலும் இந்த ‘ஆதரவு vs எதிர்ப்பு’ மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக ஆதரவு ஊடகங்கள் விஜய்யின் பேச்சை வெறும் ‘சினிமா வசனம்’ என ஒதுக்கி தள்ளினாலும், அதே ஊடகங்கள் அவரை பற்றி பேசாமல் ஒரு மணிநேரம் கூட கடக்க முடியாமல் இருப்பதே விஜய்யின் தற்போதைய அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ‘அரசியல் வியாபாரிகள்’ என்று அழைக்கப்படும் சில நபர்களின் செயல்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன. ஒவ்வொரு செய்தி தொலைகாட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப, தங்களது கருத்துக்களை மாற்றிக்கொண்டு பேசும் போக்கினை இவர்களிடம் காண முடிகிறது. ஒரு சேனலில் விஜய்யை ‘தமிழகத்தின் நம்பிக்கை’ என்று புகழும் அதே நபர், மற்றொரு சேனலில் அவரை ‘பாஜகவின் பி-டீம்’ என்று சாடுகிறார். இதுபோன்ற முரண்பாடான பேச்சுகள் ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன. விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டது போல, “களத்தில் இல்லாதவர்களை பற்றிப் பேச போவதில்லை” என்ற அவரது தெளிவான நிலைப்பாடு, இத்தகைய விமர்சகர்களுக்கே ஒரு மறைமுக பதிலடியாக அமைந்துள்ளது.
ஈரோடு கூட்டத்தின் வெற்றிக்கு பின்னால் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் ‘வியூகம்’ இருப்பதாக கூறப்படுவது ஊடகங்களுக்கு கூடுதல் தீனியாக மாறியுள்ளது. செங்கோட்டையன் விஜய்யுடன் கைகோர்த்தது முதல், அவர் விஜய்க்கு ‘செங்கோல்’ வழங்கியது வரை அனைத்தும் நுணுக்கமாக விவாதிக்கப்படுகின்றன. விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவை பலவீனப்படுத்தும் என்று ஒரு தரப்பும், இல்லை இது திமுகவை வீழ்த்த அதிமுக வகுத்துள்ள ‘மாற்றுத் திட்டம்’ என்று மறுதரப்பும் வாதிடுகின்றன. இத்தகைய ஊகங்கள் ஊடகங்களில் ஒரு தொடர்கதை போல நீண்டுகொண்டே செல்வது விஜய்யின் பிம்பத்தை மக்களிடையே இன்னும் ஆழமாக பதிய வைக்கிறது.
ஒரு கூட்டத்திற்கே ஊடகங்கள் இவ்வளவு பரபரப்பை காட்டுகின்றன என்றால், வரும் நாட்களில் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்யும்போது மீடியாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ மற்றும் அதன் இசை வெளியீட்டு விழா ஆகியவை அடுத்தடுத்த பெரிய ‘கண்டென்ட்’களாக ஊடகங்களுக்கு காத்து கொண்டிருக்கின்றன. விஜய்யின் ஒவ்வொரு அசைவும் செய்தியாகும் போது, மற்ற அரசியல் கட்சிகளின் செய்திகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. இது ஆளுங்கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ஒருவிதமான எரிச்சலை ஏற்படுத்தினாலும், விஜய்யை தவிர்க்க முடியாத சக்தியாக ஊடகங்கள் மாற்றிவிட்டன என்பதே உண்மை.
இறுதியாக, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இப்போதே களம் இவ்வளவு சூடாக இருப்பது வரும் நாட்களில் அரசியல் மோதல்கள் இன்னும் கடுமையாகும் என்பதையே காட்டுகிறது. அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், சாதாரண மக்கள் மத்தியில் விஜய்யின் பேச்சு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதுதான் முக்கியம். வரும் தேர்தல்களில் இந்த ஊடக விவாதங்கள் வாக்குகளாக மாறுமா அல்லது வெறும் ‘ரேட்டிங்’காக மட்டுமே நின்றுவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
