அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று, டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில், விரைவில் விஜய் டெல்லி செல்ல இருப்பதாகவும், அங்கு அவர் சில முக்கிய அரசியல் பிரபலங்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் சில நிர்வாகிகள் கூறும்போது, தலைவர் விஜய் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகவும், யாருமே எதிர்பாராத சில தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலை மட்டும் கவனம் செலுத்தும் விஜய், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று அறிவித்தார். ஆனால், அதே நேரத்தில் கூட்டணி அமைக்க சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்பதாலும், இதன் காரணமாக அவர் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக அவர் ராகுல் காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிடலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது முயற்சி பலிக்குமா? ராகுல் காந்தி அதற்கு என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் கருத்தாக இருந்தாலும், விஜய் டெல்லி செல்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெல்லியில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு சில காட்சிகள் நடைபெற இருப்பதாகவும், அதற்காகவே தான் அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும், அந்த பயணத்தோடு அவர் சில முக்கிய தலைவர்களை சந்திக்கலாம் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில், “விஜய் இல்லாமல் 2026 தேர்தல் இல்லை” என்றும், அவரை மையப்படுத்தியே இந்த தேர்தல் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக பலமான கூட்டணி அமைத்தாலும், இரு கூட்டணிக்கும் விஜய் சரியான சவாலாக இருப்பார் என்றும், இந்த இரு கூட்டணிகளில் ஏதாவது ஒரு கூட்டணி தோல்வி அடைந்தால், அதற்கு விஜய் தான் முக்கிய காரணமாக இருப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.