தமிழக அரசியல் களத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாற்று சக்தியாக தன்னை காட்டிக்கொள்ள முயலும் நாம் தமிழர் கட்சி, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முழுமையாகக் காணாமல் போய்விடும் என்ற விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும், நடுநிலையாளர்கள் மத்தியிலும் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. தேர்தல் அரசியலில் ஒரு கட்சியின் வெற்றி என்பது வாங்கும் வாக்கு சதவீதத்தில் மட்டும் இல்லை, அது அந்த வாக்குகள் வெற்றியாக மாறுவதில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தல்களை சந்தித்து வரும் சீமானால், இன்றுவரை ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினர் அல்லது வார்டு கவுன்சிலரை கூட தனது கட்சியின் தனி சின்னத்தில் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பது அந்த கட்சியின் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை அடிக்கடி முன்னிறுத்தும் ஒரு பெருமை, “நாங்கள் 117 பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்” என்பதுதான். ஆனால், வெறும் வாய்ப்பு வழங்குவது மட்டும் சாதனையாகி விடாது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு கட்சியாக அந்த 117 பெண்களையும் வெற்றி பெற செய்து, அவர்களை சட்டசபைக்குள் அனுப்பி தமிழ்நாட்டின் விதிகளையும், திட்டங்களையும் வகுக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு பெற்று தருவதுதான் உண்மையான சாதனையாக இருக்க முடியும். மாறாக, ஒவ்வொரு தேர்தலிலும் அந்த 117 பெண்களையும் போட்டியிட வைத்து, அவர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்வது எந்த விதத்தில் பெண்ணுரிமை அல்லது சாதனை என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் எழுப்புகின்றனர்.
2026 தேர்தலைப் பொறுத்தவரை, தமிழக அரசியலில் புதிய ஆளுமைகளின் வருகை மற்றும் ஏற்கனவே உள்ள இருபெரும் திராவிட கட்சிகளின் பலமான கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையே நாம் தமிழர் கட்சி தனது இருப்பை தக்கவைத்து கொள்வதே ஒரு மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இளைஞர்களை ஈர்க்கலாம், ஆனால் அதிகார பகிர்வு மற்றும் களப்பணி இல்லாத அரசியல் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்காது. தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி சிதறி போகும் அல்லது மற்ற பெரிய கட்சிகளுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்படும் என்ற கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் வலுவாக உள்ளன.
வெறும் வாக்கு சதவீதத்திற்காக மனித வளங்களை பயன்படுத்துவதை விடுத்து, ஆக்கப்பூர்வமான வெற்றியை நோக்கி சீமான் நகர தவறினால், 2026-க்கு பிறகு ‘நாம் தமிழர்’ என்பது ஒரு வரலாற்று பெயராக மட்டுமே எஞ்சியிருக்கும். வெற்றியை பதிவு செய்யாத எந்தவொரு போராட்டமும் காலப்போக்கில் மறக்கடிக்கப்படும் என்பதுதான் உலக நியதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
