தமிழ்நாடு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்து வரும் தொடர்ச்சியான சறுக்கல்கள், அதன் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் மனச்சோர்வையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தல்களுக்கு வலுவான கூட்டணியை அமைப்பதில் உள்ள குழப்பங்கள், கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சில முக்கிய பிரமுகர்கள் த.வெ.க போன்ற வளர்ந்து வரும் கட்சிகளுக்கு செல்லத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அண்மைய நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, அடுத்த கட்ட நகர்வில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தாலும் மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய முடியாமல் திணறுவது, தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை பலப்படுத்தியுள்ளது. “கூட்டணியே அமைக்க முடியாத ஒரு தலைவரால், தமிழகத்தில் எப்படி வெற்றியை நோக்கி செல்ல முடியும்?” என்ற கேள்வி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
“வெற்றி பெறும் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்போம்” என்ற யதார்த்தமான மனநிலை அ.தி.மு.க. விசுவாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் தி.மு.க-வை நேரடியாக எதிர்த்து போட்டியிடக்கூடிய மாற்று சக்தி எது என்று தேடும் தொண்டர்கள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை ஒரு வலிமையான தேர்வாக கருதுகின்றனர். ஒரு காலத்தில் அ.தி.மு.க-வின் ஆணிவேராக இருந்த இரட்டை இலை விசுவாசிகள் பலர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் உள்ள கட்சியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையிழந்துள்ளனர்.
அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகளில் சிலர், தற்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், மாற்று வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க-வின் முக்கிய முகமாக அறியப்படும் கே.ஏ. செங்கோட்டையன், த.வெ.க-வில் இணைந்த நிலையில், செங்கோட்டையன் கூப்பிட்டால், நாம் தமிழக வெற்றிக் கழகத்துக்குப் போயிடலாம் என்று அ.தி.மு.க-வின் அதிருப்தியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுக்குள் பேசி கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய செங்கோட்டையன் ஒரு புதிய கட்சிக்கு முக்கிய பொறுப்பு ஏற்றிருப்பதால், அ.தி.மு.க-வின் பழைய விசுவாசிகள் அதை தங்கள் ஆதரவு குரலாக கருதி பின் தொடர வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான பேச்சுக்கள், அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் கடும் அதிருப்தியின் ஆழத்தையும், செல்வாக்கு மிக்க தலைவர்களின் ஒரு சிறிய நகர்வு கூட கட்சியின் தொண்டர்களை பெருமளவில் பாதிக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
அ.தி.மு.க-வின் பலவீனமான கூட்டணி மற்றும் தலைமை பிரச்சினை காரணமாக, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க் கட்சியை அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க-வுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. அ.தி.மு.க-வின் அதிருப்தி ஓட்டுகளும், விசுவாசிகளும் த.வெ.க-வின் பக்கம் திரண்டால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பிரதான போட்டி தி.மு.க-வுக்கும் தவெகவுக்கும் இடையே நிகழும் ஒரு புதிய அரசியல் களம் அமையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, அ.தி.மு.க தலைமை உட்கட்சி அதிருப்தியை களையும் வகையில் விரைந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
