விஜய் சீமானை கூட தாண்ட மாட்டார்.. அப்பா மீண்டும் ஆட்சிக்கு வருவார்.. அண்ணாமலை கவுன்சிலர் ஆக கூட தகுதியற்றவர்: எஸ்வி சேகர்

நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் அரசியல் கட்சி தொடங்கினாலும் இன்னும் களத்துக்கே வரவில்லை என்றும், அவர் சீமானின் வாக்கு சதவீதத்தைக்கூட தாண்ட மாட்டார் என்றும், அப்பா…

sv sekhar

நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் அரசியல் கட்சி தொடங்கினாலும் இன்னும் களத்துக்கே வரவில்லை என்றும், அவர் சீமானின் வாக்கு சதவீதத்தைக்கூட தாண்ட மாட்டார் என்றும், அப்பா முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றும், அண்ணாமலைக்கு ஒரு கவுன்சிலராகக்கூட தகுதி இல்லை என்றும் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க-வுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், “சீமானின் வாக்கு சதவீதத்தைக்கூட விஜய் தாண்ட மாட்டார்” என எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். “சீமான் பல அரசியல் போராட்டங்களை நடத்தியவர். களத்தில் இருப்பவர். ஆனால், விஜய் இன்னும் களத்திற்கே வரவில்லை. எனவே, அவரால் வாக்குகளை பெற முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது என்றும், இன்னும் வலு சேர்க்க பா.ம.க. அந்த கூட்டணிக்கு வர இருக்கிறது என்றும், எனவே அப்பா ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதிலளித்தார்.

“அண்ணாமலை இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அவரால் ஒரு கவுன்சிலராகக்கூட முடியவில்லை” என்று கூறிய எஸ்.வி. சேகர், “காசு கொடுத்து அவர் ஒரு கூட்டத்தை வைத்திருக்கிறார். தன்னைத்தானே புகழ்வதற்காக அந்த கூட்டத்திற்கு காசு கொடுக்கிறார்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். “அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியாது. அவர் ஒரு பூஜ்ஜியம். கிரிமினல் மனப்பான்மை கொண்ட ஒரு அரசியல்வாதி. அவர் அரசியலில் ஒரு பிசாசு. அடுத்தவருடைய பிழைப்பை கெடுக்க முடியுமே தவிர, தான் சார்ந்த கட்சிக்கு எந்தவிதமான லாபமும் அவரால் இருக்காது. ஒரு போருக்கு போக வேண்டும் என்றால் கத்தியை எடுத்து முன்னால் உள்ளவர்கள் மீது சுழற்ற வேண்டுமானால், ஆனால் அண்ணாமலை இரண்டு கைகளிலும் கத்தியை வைத்துக்கொண்டு தன் கூட இருப்பவர்களையே வெட்டி சாய்த்துவிடுவார்” என்றும் எஸ்.வி. சேகர் காட்டமாகப் பேசினார்.

தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு பெரிய கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும் என்றும், “அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் மறைந்த பின்னரும், எடப்பாடி பழனிசாமி ஆளுமை உள்ள தலைவராக மாறிவிட்டார் என்றும், சசிகலாவால் கூட அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், அவர் ஒரு அரசியல் சாணக்கியர் என்றும், கண்டிப்பாக அவரது தலைமையில் அ.தி.மு.க. வீரநடை போடும்” என்றும் தெரிவித்தார். “தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி மீதி உள்ள கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது” என்றும் அவர் ஒரு கேள்விக்கு இந்த பதில் அளித்தார்.

“திராவிடர் கழகம் என்பது தி.மு.க-வுக்கு ஒரு சுமை என்றும், சர்ச்சைக்குரிய வகையில் தி.மு.க. தலைவர்கள் பேசுவதெல்லாம் திராவிடர் கழகம் மீட்டிங்கில் தான் என்றும், எனவே திராவிடர் கழகத்தை விட்டு ஒதுங்கி தி.மு.க. இருந்தால் மட்டுமே அந்த கட்சி இன்னும் வளரும்” என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், “ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத்தான் பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-சிலிருந்து தனித்து இருந்தால் தான் பா.ஜ.க. முன்னேறும்” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதிலளித்தார்.

“நான் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். ஏனென்றால், நான் இருக்கும் கட்சியில் உள்ள குறைகளைக்கூட நான் சுட்டிக்காட்டுவேன். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காகத் தவறு செய்யும்போது அமைதியாக இருக்க மாட்டேன். அதனால் தான் என்னைச் சேர்க்க மாட்டார்கள். அப்படியே சேர்த்தாலும் விரட்டி அடித்துவிடுவார்கள்.

தி.மு.க-வைப் பொறுத்தவரை, ஸ்டாலின் அவர்களின் நண்பர் என்ற முறையில் தான் அவரை அவ்வப்போது சந்திப்பேன். நான் தி.மு.க-வின் உறுப்பினர் அல்ல. அந்த நட்பு எனக்கு போதும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் விஜய்யை ஒப்பிடவே கூடாது. அது தவறு. வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிடுங்கள். ஓ பன்னீர்செல்வத்தை ஒப்பிடுங்கள், அவர்கள் எல்லாம் முதல்வராக இருந்தவர்கள். ஆனால் விஜய் இன்னும் களத்திற்கே வரவில்லை. அப்படி இருக்கும்போது, விஜய்யை மு.க. ஸ்டாலினுடன் ஒப்பிடவே கூடாது” என்று அவர் தெரிவித்தார்.