சமீபத்தில் வெளியாகி இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலிலும், குறிப்பாக ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது. ஒருபுறம், மகா கட்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ் இழைத்த தவறுகளும், அதன் மிக மோசமான தோல்வியும், மறுபுறம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அடைந்த மாபெரும் வெற்றியும் விஜய்யின் அரசியல் வியூகங்களை மாற்றி எழுத வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளன.
பிகார் தேர்தல் முடிவுகளால் நேரடியாக சிக்கலை சந்திப்பவர் விஜய் தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன:
1. பிகாரில் மகா கட்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த படுதோல்வி காங்கிரஸ் ஒரு ‘சுமை’ அல்லது ‘கூடுதல் லக்கேஜ்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், பிரதான கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்தியாக உருவெடுக்கவும் விரும்புகிறார். இதற்காக, அவர் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் எதிர்ப்பவராக தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்.
ஆனால் பிகாரில் காங்கிரஸ் காட்டிய பலவீனம், அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்ற பாடத்தை மற்ற கட்சிகளுக்கு தந்துள்ளது. பலவீனமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது, விஜய்யின் புதிய கட்சிக்கு வெற்றியைவிட தோல்வியையே அதிகம் தரக்கூடும். மறுபுறம், பிகார் முடிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள், தி.மு.க.வின் பலம் குறையவில்லை என்பதை உணர்ந்து, குறைவான இடங்கள் கிடைத்தாலும் அக்கூட்டணியை விட்டு வெளியேற தயங்குவார்கள். எனவே, விஜய் எதிர்பார்த்தது போல தி.மு.க. கூட்டணியில் இருந்து கட்சிகளை இழுப்பது கடினமாகிவிட்டது.
விஜய் கட்சிக்கு வெற்றிபெற வேண்டுமானால், தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க.வின் கூட்டணியில் இல்லாத வலுவான கட்சிகளை தன் பக்கம் ஈர்க்க வேண்டும். ஆனால், இப்போது தேசிய அரசியலில் பாஜகவின் பலம் அதிகரித்திருப்பதும், தி.மு.க.வின் கூட்டணி பலம் குறைந்தபாடில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. இந்த சூழலில், சிறிய கட்சிகள் விஜயின் பக்கம் வருவதில் தயக்கம் காட்டுவார்கள்.
மாற்றம் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றம்: ‘மாற்றம்’ என்று நம்பி கட்சியைத் தொடங்கிய விஜய், தற்போது கூட்டணியில் இணங்குவதற்குச் சரியான கட்சிகள் கிடைக்காமல் போவது, மாற்றம் தேடி வந்தவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடும். பிகாரில் NDA பெற்ற மாபெரும் வெற்றி, தமிழ்நாட்டில் கூட்டணியை வலுப்படுத்த பாஜகவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
பிகாரில் சிராக் பாஸ்வான் போன்றவர்களை கூட்டணியில் சேர்த்து வெற்றியை அடைந்த ‘ஒற்றுமை ஃபார்முலாவை’ தமிழகத்திலும் செயல்படுத்த பி.ஜே.பி. முனைந்துள்ளது. தேமுதிக, பாமக போன்ற முடிவெடுக்காத கட்சிகளையும், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். போன்றோரின் சொற்ப வாக்குகளையும் கூட சிதறவிடாமல் தடுக்க பி.ஜே.பி. முயலும். பாஜகவின் பலம் தற்போது அதிகரித்துள்ளதால், அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டில் வலுவான நிலையில் பேரம் பேச முடியும்.
விஜய்யின் தற்போதைய அரசியல் சூழல், அவர் அ.தி.மு.க. – பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. அரசியல் வல்லுநர்களின் கணிப்புப்படி, ஒருவேளை விஜய் இந்த கூட்டணிக்குள் சென்றால், பாஜக அவரை ஒரு கூடுதல் பலமாக பயன்படுத்தி, அவருக்கு அதிகபட்சமாக 40 முதல் 50 தொகுதிகளும் ‘துணை முதல்வர்’ பதவி போன்ற பதவிகளுமே கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கட்சி ஆரம்பித்த விஜய், வெறும் 50 தொகுதிகளுடன், கூட்டணிக்குள் இருக்கும் ஒரு சிறிய அங்கமாக மாறுவது, அவர் “பத்தோடு பதினொன்றாக” மாறிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பும். மாற்றம் வேண்டும் என்று நம்பி வந்த மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு, வெறும் துணை முதல்வர் பதவி அல்லது குறைவான தொகுதிகளுடன் சமரசம் ஆவதை பார்த்தால், “இதற்கா கட்சி ஆரம்பித்தார் விஜய்?” என்ற ஏமாற்றமே மிஞ்சும்.
வெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ சமரசம் செய்து கொள்வது, மக்கள் விஜய்யிடமிருந்து எதிர்பார்த்து வந்த மாற்றத்தை வீணடித்துவிடும்.
எனவே விஜய் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ‘மாற்றம்’ என்ற அவரது முழக்கத்தை உண்மையாக்குகிறதா அல்லது அவர் ‘பத்தோடு பதினொன்றாக’ ஆகிறாரா என்பதை தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
